அதிமுக ரூ.1500, திமுக ரூ.1000 கொடுத்தாங்க : கஸ்தூரி பாட்டி பேட்டி

புதன், 11 மே 2016 (13:41 IST)
ஒரே மூதாட்டியை  திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய அரசியல் விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ள விவகாரம் தற்போது வெளியே வந்திருக்கிறது.


 

 
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருபவர் கஸ்தூரி(67). இவர் சில சினிமாவிலும் நடித்துள்ளார். அதிமுகவிற்கு ஆதராவாக வெளியான ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில்,  கோவிலில் அன்னதானம் சாப்பிடும் ஆதரவற்றவராக வரும் இவர் “பெத்த புள்ள சோறுபோடல.. எனக்கு சோறு போட்ட தெய்வம் புரட்சி தலைவி அம்மாதான்” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார்.
 
அடுத்து, திமுகவின் விளம்பரத்தில் வரும் இவரே “வானத்துல பறக்கிறவங்களுக்கு நம்மோட பிரச்சனை எப்படி தெரியும்... மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க, போதும்மா..” என்று பேசுகிறார்.
 
இந்த இரண்டு விளம்பரங்களுமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஒருவரே இரு கட்சி விளம்பரத்திலும் நடித்திருப்பது, அந்த கட்சிகளின் மீது மக்கள் வைத்திருந்த நம்பகத் தன்மையை கேள்வி குறி ஆக்கியுள்ளது.


 


ஆயாவையே மாத்தாதவர்கள் எப்படி ஆட்சியை மாற்றுவர்கள்? என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த கஸ்தூரி “இருபது நாட்களுக்கு முன், அதிமுக விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை அழைத்தனர். அதற்கு 1500 ரூபாய் கொடுத்தனர். சில நாட்கள் கழித்து, வேறொரு விளம்பரத்தில் நடிக்க அழைத்தனர். அதில் நடித்து முடித்ததும் ‘இது கட்சி விளம்பரம் போல் இருக்கிறதே’ என்று கேட்டேன். மேலும் நான் அதிமுக விளம்பரத்தில் நடித்ததையும் கூறினேன். 


 

 
அதனால் என்ன.. பரவாயில்லை என்று கூறி 1000 ரூபாய் கொடுத்தனர். இப்போதுதான் நான் அதிமுக, திமுக இரண்டு அரசியல் விளம்பரங்களிலும் நடித்துள்ளேன் என்பது எனக்கு தெரிய வந்துள்ளது. இதனால் எங்கள் பகுதி மக்கள் என்னை கிண்டல் செய்கின்றனர்” என்று கஸ்தூரி பாட்டி கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்