விஜயகாந்த் அணிக்கு ஆதரவு இல்லை : ஆம் ஆத்மி அறிவிப்பு

சனி, 2 ஏப்ரல் 2016 (15:48 IST)
வருகின்ற சட்டசபை தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் அணிக்கு ஆதரவு இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.


 

 
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மற்றும் பிரேமலதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
 
இதையடுத்து விஜயகாந்த் அணிக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் வைகோ ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் சமீபத்தில் சென்னை தியாகராயநகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சென்று, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, தங்கள் கூட்டணிக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 
வைகோ உள்ளே பேசிக் கொண்டிருந்த அதே நேரம், அந்த அலுவகலத்தின் வெளியே நின்றிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், விஜயகாந்த் அணிக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று கோஷமிட்டனர். 
 
தற்போது விஜயகாந்த் அணிக்கு ஆதரவு இல்லை என்று ஆம் ஆத்மி அறிவித்துவிட்டது. இது தொடர்பாக, ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக சட்டசபை தேர்தல் நிலவரங்களை ஆம்ஆத்மி கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஊழல் தான் மிகப்பெரியதாக சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. எனவே தமிழகத்தில் அனைத்து அமைப்புகளையும் மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. எனவே இந்த நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்று ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சோம்நாத் பாரதி கையெழுத்திட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்