ஸ்டெப்ஃபெனி கோலக் – உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கியவர்

தேமொழி

வியாழன், 31 ஜூலை 2014 (12:08 IST)

நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது  நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும்  ஒப்பிட இயலாது. - ஸ்டெப்ஃபெனி கோலக்


ஸ்டெப்ஃபெனி கோலக் (Stephanie Louise Kwolek, ஜூலை  31, 1923 – ஜூன் 18, 2014) தனது கண்டுபிடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காத்திருக்கிறார்.
 
உலகப் புகழ் பெற்ற நிறுவனமான  ‘டூபாண்ட்’ (DuPont) நிறுவனம் வெறும் 500 மில்லியன் டாலர்களை  ஒரு செயற்கை இழை ஆராய்ச்சியில் முதலீடு செய்து,  பின்னர் அதன் மூலம் பில்லியன் பில்லியன்களாக  டாலர்களில்  பொருள் ஈட்டியது.  அதற்கு அடிப்படைக் காரணம், ஸ்டெப்ஃபெனி கோலக்  கண்டுபிடித்த  ஒரு செயற்கை இழை. இன்று உலகெங்கிலும் குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்ததால் உயிர் பிழைத்தோரின்  உயிர்களைக் கவசமாக இருந்து காப்பாற்றியது இந்த ஆடைகளில் இருக்கும் குண்டு துளைக்காத இழை (bulletproof fiber)தான். உயிர் காக்கும்  இந்த செயற்கை  இழையின் பெயர்  கெவ்லர் (Kevlar®).
 
குறைந்த எரிபொருள் பயன்படுத்தி ஓடும் கார்களைத் தயாரிக்க 1970 களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு காரணம் அக்காலத்தில் இருந்த  பெட்ரோல் பற்றாக்குறையாகும். அதனால் இரும்புக் கம்பிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த கார் சக்கரங்களில் (car tires) அவற்றிற்கு மாற்றாக  எடை குறைந்த, ஆனால் உறுதியான செயற்கை இழைகளைப் பயன்படுத்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
 
நைலான் போன்ற செயற்கை இழைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருந்த டூபாண்ட்  நிறுவனமும் இந்த முயற்சியில் ஈடுபட்டது. டூபாண்ட் நிறுவனத்தின் வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் ஸ்டெப்ஃபெனி கோலக்கும் அங்கு ஒரு ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பலபடி சேர்ம ஆராய்ச்சி ( polymer research) முறையில் நீளமான கரிம சங்கிலியால் ஆன இழைகளைத் தயாரிக்க விரும்பிய ஆய்வாளர்கள், பல வேதிப் பொருட்களை ஒன்றுடன் ஒன்றாகக் கலந்தனர்.  பின்னர் அக்கலவையை ஒரு திரவத்தில் கரைத்து, அந்த  திரவக் கரைசலை செயற்கை இழை செய்யும் சுழலும் கருவியில் ஊற்றி (பஞ்சு மிட்டாய் செய்வது போலவே),  கருவியைச்  சுழற்றி இழைகளாக உருவாக்கினர். 


உருவாக்கிய இழைகளின் பண்புகளையும், உறுதியையும் அறிய அவற்றை அடுத்த படியாக பலவகைச் சோதனைகளுக்கு உட்படுத்தி ஆராய்ந்தனர். ஸ்டெப்ஃபெனி கோலக்கும் இதே முறையில் திட நிலையில் இருந்த வேதிப் பொருள்களின் கலவையை, திரவக் கரைசலாக மாற்றினார். பொதுவாக இவ்வாறு கிடைக்கும் கரைசல் அடர்த்தி நிறைந்த பாகு போலவும், தெளிந்தும் இருந்தால் (அதாவது பார்ப்பதற்கு தேன் அல்லது சர்க்கரைப் பாகு போன்ற தோற்றத்தை ஒத்திருந்தால்) செயற்கை இழைகளை உருவாக்க சிறந்த கரைசலாக ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்படும். ஆனால் ஸ்டெப்ஃபெனி கோலக் உருவாக்கிய கரைசல் துகள்கள் நிறைந்து, கலங்கலாக மிகவும் நீர்த்துப் போன தோற்றம் (மோர் போன்ற தோற்றம்) கொண்டதாக இருந்தது.
 
அவருடன் பணிபுரியும் ஆய்வாளர்கள் அக்கரைசலைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஆராய்ச்சியைத் துவக்க ஆலோசனை சொன்னார்கள். கரைசலில் உள்ள திரவத்தை மட்டும் உறிஞ்சிவிட்டு இழைகளை விட்டுவிடும் இழை தயாரிக்கும் கருவியை (laboratory spinneret machine) இயக்கும் ஆராய்ச்சியாளரும் அந்தக் கரைசலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஸ்டெப்ஃபெனி கோலக் அந்தக் கரைசலை வடிகட்டி துகள்களை நீக்கிய பிறகு, மீண்டும் மிகவும் விடாப்பிடியாக அவரை வற்புறுத்தி செயற்கை இழை தயாரிக்கச் செய்தார்.
 
இந்த இழையை அழுத்தம் கொடுத்துச் சிதைக்கும் சோதனைக்கு உட்படுத்திய பொழுது, பெரும்பாலான இழைகள் நொறுங்கிவிடும். ஆனால் இந்த இழை அழுத்த நிலையையும் தாண்டி மிகவும் விரைப்பாகவும் நொறுங்காமலும் சிதையாமலும் இருந்தது. இந்தப் பண்பை நன்கு உறுதி செய்துகொண்ட பின்னர், ஸ்டெப்ஃபெனி கோலக் நிர்வாகத்தினரிடம் இந்தத் தகவலை அளித்தார். டூபாண்ட் நிர்வாகத்தினர் உடனே ஒரு ஆராய்ச்சிக் குழுவையே இதற்காக உருவாக்கி, இழையின் பல்வேறு பண்புகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
 


பாலி – பாரஃபைனைலீன்  டெட்ரிஃப்தாலமைட் (poly-paraphenylene terephthalamide) என்ற இந்த இழைக்கு ஆய்வகத்தில் “ஃபைபர் பி” (“Fiber B”) எனப் பெயரிட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அச்சோதனைகளின் மூலம் இந்தச் செயற்கை இழை, எஃகை விட ஐந்து மடங்கு மிகவும் உறுதியானதாகவும், அதே சமயம் எடை குறைவானதாகவும் இருப்பதும், தீயெதிர்ப்புத் திறன் கொண்டிருப்பதும் அறியப்பட்டது. சந்தையில் ‘கெவ்லர் ‘ என்ற பெயரில் இந்த இழை அறிமுகப்படுத்தப்பட்டது. இழை கண்டுபிடிக்கப்பட்ட 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு கார் சக்கரங்களில் மட்டுமின்றி, அதன் உறுதியான மற்றும் எடை குறைவான பண்புகளின் காரணமாக உயிர் காக்கும் கவச ஆடைகளிலும், தலைக்கவசங்களிலும் 1975 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும்

குண்டு துளைக்காத கவச ஆடை தயாரிப்பில் பெரும் பங்கு இடம் பெற்று, அதனால் உலகப் புகழ் பெற்றுப் பலரால் அறியப்பட்டாலும், கெவ்லர் செயற்கை இழை மேலும் பல வகைகளில் நம் அன்றாட வாழ்வில் இடம் பெற்றுள்ளது. சில எடுத்துக் காட்டுகள்: எடை குறைவான உறுதியான கருவிகள், கார் டயர்கள், தீயணைப்பு வீரர்களின் காலணிகள்,  ஹாக்கி மட்டைகள், கிழியாத கையுறைகள், கண்ணாடி கம்பி வடம் (fiber-optic cables), தீப்பற்றாப் படுக்கைகள், ஓடங்கள், விமானங்கள், கவச ஊர்திகள், தீப்பற்றாக் கட்டடப் பொருட்கள், சூறாவளியாலும், குண்டுகளாலும்  சிதைவுறாப் பாதுகாப்பு அறைகள், தேய்வுற்ற பாலங்களின் சீரமைப்பு, கைபேசிகள் எனப் பல வழிகளிலும் பல பொருட்களிலும் பற்பல வகைகளில் கெவ்லர் இழை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பின்நாளில் இந்த இழையைப் பற்றிக் குறிப்பிட்ட ஸ்டெப்ஃபெனி கோலக், கெவ்லர் உருவானது ஒரு தற்காலிக விளைவுதான், ‘யுரேகா’ கண்டுபிடித்துவிட்டேன் என்பது போன்ற பிரிவில் இந்த நிகழ்வு அடங்காது. அவசரப்பட்டு உடனே அறிவித்து, பிழையானால் நகைப்புக்குள்ளாக நேரும் என்பதால், நானும் பொறுமையாக இழையின் பண்புகளை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே நிர்வாகத்தினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.
 
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், உழைப்பை முதன்மையாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்டெப்ஃபெனி கோலக். இவர் பெற்றோர்கள் போலந்திலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியவர்கள். ஸ்டெப்ஃபெனி கோலக் ஆடைகளை வடிவமைப்பது உட்பட, சிறு வயதில் பல துறைகளிலும் ஆர்வமுடையவராக விளங்கினார். ஆசிரியராக, மருத்துவராகப் பணிபுரிய வேண்டும் என்ற கனவுகளும் கொண்டிருந்தார். இவரது கலைப் பின்னணியையும், ஆடைகளுக்கு வடிவமைக்கும் திறனையும் இவர் அன்னை ஊக்கப்படுத்தினார். இயற்கையை விரும்பும் இவரது தந்தை இவரை வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காக்களுக்கும் காடுகளுக்கும் நீர்நிலைகளுக்கும் அழைத்துச் சென்று மரம் செடி கொடிகள், விலங்குகள் இவற்றைக் காட்டியும்  அறிவியல், கணிதம் போன்றவற்றில் இவருக்கு ஆர்வம் ஊட்டினார்.



இவரது தந்தை இவரது பத்தாவது வயதில் மரணமடைந்துவிட, தாயார் பராமரிப்பில் வளர்ந்தார். அமெரிக்காவின் பஞ்ச காலமான 1930களில் இவரது அன்னை மிகவும் சிரமப்பட்டு இவரை வளர்த்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, கார்னகி மிலான் (Carnegie-Mellon Univeristy) பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். மேற்கொண்டு மருத்துவம் படிக்கப் பணம் சேர்ப்பதற்காக தற்காலிகமாக ஒரு பணியில் சேர விரும்பி கல்ஃப் ஆயில் (Gulf Oil), டூபாண்ட் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தார். பொதுவாக பெண்கள் அதிகம் பணிபுரியாத காலம் அது. அத்துடன் நிறுவனங்களும் பெண்களைப் பணியமர்த்துவதில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரின் காரணமாக, ஆண்கள் பலர் போருக்குச் சென்றுவிட்ட காரணத்தினால், வேறு வழியற்ற நிலையில் பெண்களுக்குப் பணிபுரியும் வாய்புகள் அமைந்தன. அதனால்  ஸ்டெப்ஃபெனி கோலக்கிற்கும் டூபாண்ட் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

கெவ்லர் இழை கண்டுபிடிப்பிற்குப் பிறகு, ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் ஏற்பட்டதன் விளைவாக மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்டெப்ஃபெனி கோலக் கைவிட்டார். இளங்கலை பட்டத்தைத் தவிர்த்து மேற்படிப்பிற்கான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இழை கண்டுபிடிப்பின் காப்புரிமையை டூபாண்ட் நிறுவனத்திற்கு ஒப்படைத்துவிட்டார். இழை கண்டுபிடிப்பு மட்டுமே தனக்கு உரிமை, ஆனால் அதைப் பலவிதப் பயன்பாட்டிற்கும் பதப்படுத்திச் சந்தைக்கு ஏற்றவாறு வெளியிட்டதில் அவர் பங்கு கொள்வது முறையல்ல என்ற எண்ணம் கொண்டிருந்தார். கெவ்லர் இழையை மேன்மைப்படுத்த, தொடர்ந்து உழைத்தார். நிறுவனம் இவருக்கு என ஒரு தனி ஆய்வுக் கூடத்தை வழங்கியது, பலபடி சேர்ம ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். கல்விக்குப் பணம் சேர்க்க ஒரு தற்காலிகப் பணி என்று ஏற்றுக்கொண்ட பணியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து 1986இல் பணி ஓய்வு பெற்றார்.
 

 
“பெண்களில் ஓர் அறிவியல் முன்னோடி” என்றும் “கண்டுபிடித்தலின் தாய் ” என்றும்  பாராட்டப்பட்டார், ஸ்டெப்ஃபெனி கோலக். அறிவியலில் இவர் ஆற்றிய பங்கிற்காகப் பற்பல விருதுகளும் பரிசுகளும் பெற்றார். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்கினைப் பாராட்டி, ”நேஷனல் மெடல் ஆஃப் டெக்னாலஜி ( National Medal of Technology) விருது, 1996ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. பின்நாளில் ஓய்வு பெற்ற பிறகும் பள்ளிகளில் இளம்பெண்களைச் சந்தித்து, பெண்களை அறிவியல் துறையில் பங்காற்றும்படி ஆலோசனை கூறும் தன்னார்வப் பணியினைத்தொடர்ந்து செய்து வந்தார்.
 
இதுவரை ஒரு மில்லியன் குண்டு துளைக்காத கவச ஆடைகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன என டூபாண்ட் நிறுவனம் ஜூன் 2014இல் அறிவித்தது. அறிவிப்பு நிகழ்ந்த பின்னர் அதற்கு மறுவாரத்தில், உடல் நலமற்று இருந்த 90 வயதான ஸ்டெப்ஃபெனி கோலக் உயிர்நீத்தார்.
 
அமெரிக்க இராணுவம் “கெவ்லரைக் கண்டுபிடித்ததற்கு மிக்க நன்றி ஸ்டெப்ஃபெனி கோலக், உங்கள் கண்டுபிடிப்பின் மூலம் பல வீர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது, உங்கள் ஆன்மா அமைதி பெறட்டுமாக” என்று அவரது மறைவிற்கு ட்விட்டர் சமூக வலைதளத்தின் மூலம் இராணுவம் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது. 
 
துப்பாக்கி சூட்டில் கவச உடை அணிந்திருந்ததன் காரணமாக உயிர்பிழைத்தோர் ஒரு கழகம் துவக்கியுள்ளனர். அக்கழகத்தில் இதுவரை உயிர்பிழைத்த மூவாயிரத்திற்கும் அதிகமானவர் உறுப்பினர்களாக உள்ளனர். தனது உயிர் துப்பாக்கி சூட்டில் இருந்து கவச உடையால் காப்பாற்றப்பட்ட பின்னர் உயிர்பிழைத்தோர், அம்மையாரைத் தொடர்பு கொண்டு நன்றி கூறும் பொழுதெல்லாம் அதைக் கேட்டு மனம் மிக மகிழ்வாராம் ஸ்டெப்ஃபெனி கோலக்.  “நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது  நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும்  ஒப்பிட இயலாது”, என்று அவர் கூறியது அவர் அந்த செய்திகள் மூலம் கிடைத்த மனநிறைவினால்தான்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்