மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஓர் இரவு தங்க வேண்டுமா?
செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (14:37 IST)
பெரிய பெரிய நட்சத்திர விடுதிகளில் அறை எடுத்து தங்குவது என்பதை விட, ஒரு அடர்ந்த வனப்பகுதியில், மலைப் பிரதேசத்தில் ஒரு நாள் இரவு தங்கினால் எப்படி இருக்கும் என்ற ஆவலுடன் இருக்கும் தைரியசாலிகளுக்காகவே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரவில் தங்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
webdunia photo
WD
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பில்லூர் அணைப்பகுதியில் அடர்ந்த காட்டை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. ஆதிவாசிகள், அங்கிருக்கும் நிலப்பரப்பில், ராகி, கம்பு போன்றவற்றை பயிரிட்டு கிடைக்கும் குறைந்த வருவாயைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.
அதன்படி அப்பகுதியில் சூழல் சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி, பில்லூர் வனப்பகுதியில் மலையேற்றம், பவானி ஆற்றில் படகுசவாரி, அத்திக்கடவு ஆற்றில் குளியல் என ஒருநாள் முழுவதும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்.
இவற்றை எல்லாம் முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்ப வேண்டிய அவசியமில்லை. சுற்றுலா பயணிகள் இரவில் காட்டிலேயே தங்கும் வகையில் நவீன வகை கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் அன்வர்தீன் கூறுகையில், சூழல் சுற்றுலா மூலம் ஆதிவாசிகளின் வருமானம் பெருகி உள்ளது. சுற்றுலா வருவாய் மூலம் ஆதிவாசிகள் கிராமத்தில் சோலார் விளக்குகள், சிறிய காற்றாலைகள் அமைத்தல், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா செல்ல விரும்புவோர் கோவை, காரமடையில் உள்ள வன அலுவலகத்தில் நீங்கள் சுற்றுலா செல்ல விரும்பும் தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய கட்டணம் கிடையாது. சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டுமே சுற்றுலா வசதி உள்ளது.
நீங்கள் பதிவு செய்த தினத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முள்ளி வந்து, அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பரளிக்காடு என்ற இடத்துக்கு சுற்றுலா பயணிகள் வந்துவிடவேண்டும். அங்கிருந்து உங்களது சுற்றுலாத் துவங்குகிறது.
உடலுக்கு மிகவும் ஏற்ற சுக்கு காபி கொடுத்து சுற்றுலா பயணிகளை ஆதிவாசிகள் வரவேற்கின்றனர். அவர்களே பயணிகளை பவானி ஆற்றில் பரிசலில் அழைத்து செல்வர். 10 பரிசல்கள் உள்ளன. ஒரு மணி நேர சவாரிக்கு பின், ஆதிவாசி பெண்கள் தயாரித்த மதிய உணவு வழங்கப்படும். ராகி களி, மீன்குழம்பு, சைவ பிரியாணி, சர்க்கரை பொங்கல், சப்பாத்தி, குருமா வழங்குவர். சிறிது நேர ஓய்வுக்குப்பின் மலைப்பகுதிக்கு டிரேக்கிங் அழைத்து செல்வர். மாலையில் அத்திக்கடவு ஆற்றில் பாதுகாப்பான இடத்தில் குளித்து மகிழலாம்.
சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் இரவில் தங்கும் வகையில், புதிதாக 2 கூடாரங்கள் அமைத்துள்ளோம். இங்கு வனவிலங்கு ஆபத்து கிடையாது. கூடாரத்தை சுற்றி அகழி உள்ளது, எனவே காட்டுப் பகுதியில் இருந்து விலங்குகள் கூடாரப் பகுதிகளுக்குள் வர முடியாது என்று அன்வர்தீன் தெரிவித்தார்.
அடர்ந்த காட்டுப்பகுதியில் இரவில் தங்கியிருப்பது புதிய அனுபவமாகவும், வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாததாகவும் உள்ளது என்று அங்கு இரவில் தங்கிவிட்டு வந்த சுற்றுலா பயணிகள் பரவசத்துடன் கூறினர்.