இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்படுத்தி அழகுபடுத்தும் பணி ரூபாய் 20 கோடியே 75 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி நேற்று இப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.
இத்திட்டத்தில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை காமராஜர் சாலையில் கிழக்கு பக்கம் 3.10 கி.மீ. நீளத்திற்கு நடைபாதை கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டும், நடைபாதை ஓரத்தில் கிரானைட் தூண்கள் அமைத்தும் மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் கைப்பிடிகள் அமைக்கும் பணிகளும் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.
பொதுமக்கள் கடற்கரையை பார்த்த வண்ணம் அமர்வதற்காக வண்ண, வண்ண கிரானைட் கற்கள் கொண்டு 14 அமர்வு மேடைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் 12 அமர்வு மேடைகள் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 2 அமர்வு மேடைப்பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபாதைக்கும், கடற்கரை பயன்பாட்டு சாலைக்கும் இடையில் 15 மீட்டர் அகலத்திற்கு அழகிய புல்தரைகள், 4 மீட்டர் அகலத்திற்கு நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.
கடற்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள் நலன் கருதி 4 இடங்களில் நவீன பொது கழிப்பிடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதில் 2 நவீன கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையை அழகுபடுத்த சிறப்பு மின்விளக்குகள் ரூ.3.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 90 விழுக்காட்டிற்கு மேல் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் மெரினா கடற்கரை சென்னை மாநகருக்கு அழகு சேர்ப்பதுடன் உலகத்தில் அழகுபடுத்தப்பட்ட முதல் கடற்கரையாகவும் விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது.