பறவைகளுக்கு சரணாலயமாக விளங்கும் வேடந்தாங்கல், சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு பறவைகள் வாழ்வதற்கான நீர் ஆதாரம், உணவு, உறைவிடம் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பதால் வெளிநாட்டு பறவைகள் பலவும் வேடந்தாங்கலை நோக்கி வருகின்றன.
ஆண்டுதோறும் பருவமழைக்கு பிறகு வேடந்தாங்கல் ஏரி நிரம்புவதால் அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு பறவைகள் ஜோடியாக இப்பகுதிக்கு வரத்தொடங்கும். டிசம்பர் மாதத்தில் பறவைகளின் வருகை அதிகரிக்கும். பின்னர், இங்குள்ள மரங்களில் கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து குடும்பமாக வாழும். பின்னர், குஞ்சுகளுக்கு இங்கேயே பறக்க கற்றுக்கொடுத்து ஜுன் மாத இறுதியில் புதிய குடும்பத்துடன் தனது சொந்த நாட்டிற்கு பறந்து செல்லும்.
இந்த ஆண்டு வேடந்தாங்கலுக்கு சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா, இலங்கை, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் வந்தன. இதில், நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, பாம்புத்தாரா, மண்வெட்டி வாயன், சிறிய நீர்காகம், கரண்டி வாயன், தட்டவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், வக்கா ஆகியவை முக்கியமானதாகும்.
இந்த ஆண்டு வேடந்தாங்கல் ஏரிக்கு 27 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 2 ஆயிரம் அதிகமாகும். இங்குள்ள மரங்களில் கூடுகள் அமைத்து சந்தோஷமாக இருந்த பறவைகளுக்கு சோதனையாக கோடை காலம் வந்தது. ஏப்ரல் மாதம் முதல் ஏரியில் நீர் குறையத் தொடங்கியது.
இதனால், வெளிநாட்டு பறவைகள் தங்களது புதிய குடும்பத்துடன் தங்களது சொந்த நாடுகளுக்கு பறக்கத் தொடங்கின. இதுவரை வேடந்தாங்கலுக்கு வந்திருந்த 50 விழுக்காடு பறவைகள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட்டன. மீதம் உள்ள பறவைகள் ஏரியில் உள்ள மரங்களிலும், மரங்களுக்கு அடியில் நிழலிலும், தண்ணீரில் நீந்தியபடியும் சுற்றித் திரிகின்றன.
இந்த ஆண்டு சைபீரியா நாட்டில் இருந்து வந்த வர்ண நாரைகள் ஜனவரி மாத இறுதியில்தான் வேடந்தாங்கல் ஏரிக்கு வந்தன. அதனால், அந்த பறவைகள் இப்போதுதான் குஞ்சுகள் பொறித்து, அவைகளுக்கு பறக்க கற்று கொடுத்து வருகின்றன. இம்மாத இறுதிக்குள் இந்த பறவைகளும் தங்களது நாடுகளுக்கு சென்றுவிடும். பின்னர், பருவமழைக்கு பிறகு, அக்டோபர் மாதம் முதல் மீண்டும் வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் ஏரிக்கு வரத்தொடங்கும்.