குற்றாலத்தில் கடந்த ஒரு வார காலமாக சாரல் மழை நின்றுபோய் கடும் வெயில் வாட்டுகிறது. மேலும், குற்றாலத்தில் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது.
தமிழகத்தில் பொதுவாகவே வறண்ட வானிலை காணப்படுகிறது. பகல் வேளையில் அனல் காற்றும், வெப்பதும் மக்களை வாட்டுகிறது.
இரவில் சில இடங்களில் அதிகமான புழுக்கமும், சில இடங்களில் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. அவ்வப்போது லேசாகத் தூவுகிறது.
குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.
ஐந்துருவியில் நன்கு பிரிவுகளில் மட்டுமே ஓரளவிற்கு தண்ணீர் கொட்டுகிறது.
பேரருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவிற்கு தண்ணீர் கொட்டுகிறது. ஆனால் பெண்கள் பகுதியில் மிகவும் குறைவாகவே தண்ணீர் கொட்டுகிறது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்தனர். ஆனால் அருவிகளில் குறைவான அளவே தண்ணீர் விழுவதால் நீண்ட வரிசையில் காத்து நின்று அருவியில் குளித்துச் சென்றனர்.
இதனால் பலரும் தங்களது சுற்றுலாப் பயணத்தை இன்பமாகக் கழிக்க இயலாமல் போனதாக வருத்தம் தெரிவித்தனர்.