கோடை விடுமுறையையொட்டி தற்போது சுற்றுலாத் தலங்கள் எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்வதைக் காண முடிகிறது. தற்போது கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஏராளமான பயணிகள் சென்று வரும் இடமாக ஒகேனக்கல் விளங்குகிறது. வார நாட்களை விட, வார இறுதி நாட்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டுகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அனைவரது கவனமும் சுற்றுலாவின் மீது திரும்பியுள்ளது. இதில் தற்போது நீர் நிறைந்த பகுதியாக விளங்கும் ஒகேனக்கல்லை நோக்கி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர். இதனால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்தனர். கார், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் என பல்வேறு போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி ஏராளமானோர் ஒகேனக்கல் வந்திருந்தனர்.
அவரகள் ஒகேனக்கல்லில் சினி பால்ஸ், ஐந்தருவி, பெரிய அருவி உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். மேலும் அருவியில் குளித்தும், படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் மணல் திட்டு பகுதிகளில் ஆங்காங்கே சமையல் செய்து குடும்பம் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டதையும் காண முடிந்தது.
சுற்றுலா பயணிகளின் வருகையால் ஒகேனக்கல்லில் பிலிகுண்டு, முதலை பண்ணை, பரிசல் துறை, தொங்கு பாலம், ஆற்றுப்படுகைகள், பார்வை கோபுரம், மணல் திட்டு, உயிரியல் பூங்கா, சிறுவர் பூங்கா, தமிழ்நாடு ஓட்டல் உள்பட அனைத்து இடங்களிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இங்குள்ள கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
ஒரே நாளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்ததால், வாகனத்தை நிறுத்தும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டது. அருவியில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும், உணவு விடுதிகளிலும் அதிக நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் சற்று சிரமப்பட்டனர்.