ரெயில் டிக்கெட், கார் மற்றும் தங்கும் வசதியுடன் ஊட்டி, கொடைக்கானல் செல்ல புதிய சுற்றுலா திட்டத்தை ரெயில்வே சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வரும் கோடைக்காலத்தில், தமிழகத்தின் கோடை வாசஸ்தலமான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தனியாக இருவர் செல்வதற்கும், குழுவாகப் போய் வருவதற்கும் இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றுலா ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னையில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா முடித்து (4 இரவு, 3 பகல்) திங்கட்கிழமை காலை சென்னை வந்து சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவில் உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட் (இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி), கார் அல்லது சிறிய பேருந்து, தங்குமிடம் ஆகியவை கட்டணத்தில் அடங்கும். இதன்படி, தனியாக செல்பவர்களுக்கு கார் வசதியும், குழுவாக செல்பவர்களுக்கு மினி பேருந்தும் ஏற்பாடு செய்யப்படும்.
சென்னையில் இருந்து நீலகிரி விரைவு ரயில் (2671/2672) மூலம் மேட்டுப்பாளையம் சென்று, அங்கிருந்து ஊட்டி மலை ரயில் மூலம் ஊட்டி சென்றடையலாம். இதற்கான கட்டணம் தனி நபர் ஒருவருக்கு ரூ.4,600 ஆகும். மூன்று பேர் ஒரே அறையில் தங்குவதாக இருந்தால் தனி நபருக்கு ரூ.3,550. ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. 5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறுவர் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஊட்டி செல்ல சிறுவர்களுக்கு ரூ.1,850. அதுபோல, நீலகிரி விரைவு ரயிலில் கோவை சென்று அங்கிருந்து சிறிய பேருந்து மூலம் ஊட்டி செல்ல கட்டணம் ஒரு நபருக்கு ரூ.2,950. மூன்று பேர் ஒரு அறையில் தங்குவதற்கு தனி நபருக்கு ரூ.2,650. சிறுவர்களுக்கு ரூ.1,750.
கொடைக்கானல் செல்வதற்கு பொதிகை விரைவு ரயிலில் (2661/2662) மதுரை சென்று தனியாக செல்பவர்களுக்கு நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ,4,900 ஆகும். மூன்று பேர் ஒரு அறையில் தங்குவதற்கு நபர் ஒருவருக்கு ரூ.3,800 கட்டணம் வசூலிக்கப்படும்.
சிறுவர்களுக்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். கொடைக்கானலுக்கு குழுவாக செல்பவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.3,350-ம், மூன்று பேர் தங்குவதற்கு ரூ.3,050-ம், சிறுவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேற்கூறிய இடங்களைத் தவிர ஆலப்புழை-குமரக்கோம், மதுரை-தேனீ, கொச்சின்-மூணாறு, வயநாடு, மூகாம்பிகை, மதுரை-ராமேசுவரம், மதுரை-கன்னியாகுமரி சுற்றுலா செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு சென்னை சென்ட்ரலில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.