சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்
திங்கள், 26 ஏப்ரல் 2010 (15:12 IST)
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 525 சிறப்புப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.
நாளை சித்ரா பெளர்ணமி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், சித்ரா பெளர்ணமி திருவிழாவும் நடைபெறுகிறது.
பொதுவாக பெளர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதிகமாக இருப்பார்கள். இதில் சித்ரா பெளர்ணமி என்றால் அதிக விசேஷம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை எட்டும்.
பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 450 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இவை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதேப்போல், புதுச்சேரி, செஞ்சி, கடலூர், வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முன்பதிவுக்கு ரூ.5 கட்டணமாகும். இன்று முதல் 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து சென்னை வருவதற்கு மட்டுமே திருவண்ணாமலையில் முன்பதிவு செய்யப்படுகிறது.