திரிசூலம், டாப்சிலிப் மலைகளுக்கும் சுற்றுலா

புதன், 28 அக்டோபர் 2009 (11:39 IST)
சேர்வராயன் மலையோடு திரிசூலம், டாப்சிலிப் உள்ளிட்ட மலைகளுக்கும் இளைஞர்கள் சாகச சுற்றுலா செல்வதற்கு சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு ஏற்பாடு செய்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் சுற்றுலாதுறை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குனர் ஆர்.சி.மோகன்தாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவு சாகச சுற்றுலாவை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மலைப்பகுதிகளுக்கு இளைஞர்களை அழைத்துச் சென்று இயற்கை வளங்களையும், அவற்றின் இனிமையையும் நுகர வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

முதல்கட்டமாக இந்த மாதம் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய நாட்களில் சேர்வராயன் மலைக்கு இளைஞர்களை நடைபயணமாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கான சு‌ற்றுலா பேரு‌ந்து 30-ந் தேதி இரவு 10 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் இருந்து புறப்படும். அந்த பேரு‌ந்து 31-ந் தேதி காலை ஏற்காட்டை சென்றடையும். அங்கிருந்து நடைபயணம் தொடங்கும்.

இரவு அங்குள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதியில் தங்குவார்கள். மறுநாள் படகில் செல்வது, அருகில் இருக்கும் கிராமங்களுக்கு செல்வது, கிள்‌ளியூர் அருவிக்கு செல்லுதல், தோட்டக்கலை பூங்கா, சேர்வராயன் கோயில் செல்வது ஆகியவற்றை முடித்துவிட்டு பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு திரும்புவார்கள்.

2-வது சுற்றுலாவாக நவம்பர் 7-ந் தேதி அன்று காலை 6 மணியளவில் சுற்றுலா அலுவலகத்தில் இருந்து சென்னை அருகேயுள்ள திரிசூலம் மலைப்பகுதியில் நடைபயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.250. மூன்றாவது சுற்றுலாவாக, நவம்பர் 13-ந் தேதி அன்று இரவு 8 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை டாப்சிலிப் மலையை சென்றடையும். டாப்சிலிப்பில் உள்ள மலைப்பகுதியில் நடைபயணம் தொடங்கும். இந்த சுற்றுலா 16-ந் தேதி அன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தடையும். இதற்கு கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும்.

இந்த கட்டணத்தில் தங்குவதற்கான கட்டணம், உணவு வசதி மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவை அடங்கும். இந்த சுற்றுலாவுக்கு வர விரும்புவோர் `பொதுமேலாளர், சுற்றுச்சூழல் சுற்றுலா பிரிவு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், வாலாஜா சாலை, சென்னை-2' என்ற பெயரில் தங்கள் பெயரை முன்பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

இந்த சாகச சுற்றுலாவில் பங்கேற்கும் இளைஞர்கள் நடைபயணத்திற்கு ஏற்ற கால்சட்டை, பனியன், டிரக்கிங் காலணிகள், தொப்பி, குளிர் கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர வேண்டும். பைனாகுலர் கொண்டுவந்தால் அருமையான காட்சிகளைப் பார்க்க வசதியாக இருக்கும். இந்த பயணத்தில் பங்குபெற விரும்புபவர்கள் 6 முதல் 7 மணி நேரம் வரை நடக்கிற தெம்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். பயணத்திற்கு வரும் இளைஞர்கள் பசுமையான மலைச்சாரலின் அழகினை ரசித்து, மாசற்ற, குளுமையான காற்றினை நுகர்ந்து, உள்ளப் புது பொலிவோடு சென்னை திரும்புவார்கள்.

இவர்களின் பயணத்திற்கு உறுதுணையாக சுற்றுலாதுறை அதிகாரிகளும், உள்ளூர் வழிகாட்டிகளும், போகிற வழியில் இருக்கின்ற தாவரங்கள், பறவைகள், விலங்குகளை இனங்கண்டு சொல்லும் நிபுணர்களும் உடன் வருவார்கள். காட்டுப் பயணத்தின்போது புகைப்பிடித்தல், குப்பைகளை போடுதல் போன்ற செயல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த பயணத்திற்கு 044-25383333, 25384444, 25367850 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்யலாம் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்