தமிழக சுற்றுலா மையங்களின் ஓவியங்கள் அடங்கிய புத்தகம்

சனி, 28 நவம்பர் 2009 (11:43 IST)
தமிழக சுற்றுலாவை வள‌ர்‌க்கு‌ம் வகை‌யி‌ல், த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள சு‌ற்றுலா‌த் தள‌ங்க‌ளி‌ன் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தை த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி வெளியிட்டார்.

இது கு‌றி‌த்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை "தூரிகையில் தமிழகம்'' என்ற நிகழ்ச்சியினைத் தனியார் நிறுவனத்தின் பங்கேற்புடன் சென்னை ராஜாஜி மண்டபத்தில் ஏற்கனவே நடத்தியது. அந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்கள் பலர் கலந்துகொண்டு, தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா மையங்களையும், பண்பாட்டுச் சாரங்களையும் ஓவியங்களாகத் தீட்டினார்கள். அப்பொழுது, அந்த ஓவியங்களைப் பொதுமக்கள் பலர் பார்வையிட்டு மகிழ்ந்து பாராட்டினார்கள்.

அந்த ஓவியங்களையெல்லாம் தொகுத்து, தமிழக அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை, `தூரிகையில் தமிழகம்' என்கிற பெயரில் புத்தகமாகத் தயாரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களை வண்ணத்தில் காட்சிப்படுத்தி இப்புத்தகத்தில் அமைந்துள்ள ஓவியங்களுக்குக் கீழே, அவை குறித்த விளக்கங்கள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விளக்கங்களோடு இப்புத்தகத்தைக் காணும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் தொன்மைச் சின்னங்களையும், பாரம்பரியப் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து உணர்ந்து மகிழ்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

மேலும், தமிழக சுற்றுலா மையங்களைக் காண வேண்டுமெனும் ஆர்வத்தையும் அவர்களிடம் உருவாக்கிட இது ஒரு கருவியாக அமையும். இப்புத்தகம் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலுமுள்ள சுற்றுலாத்துறை அலுவலகங்கள், விருந்தினர் இல்லங்கள், இதர மாநில சுற்றுலா அலுவலகங்கள் அனைத்திலும் பார்வைக்கு வைப்பதற்கு பயன்படும்.

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி இப்புத்தகத்தினை, நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். அதன் முதல் பிரதியினைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி பெற்றுக்கொண்டார் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்