குற்றால அருவிகளில் கடந்த வாரங்களில் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்த நிலையில் நேற்று தண்ணீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மாதம் இறுதி வாரத்திலேயே நீர்வரத்து வரத் தொடங்கியது. ஆனால் ஒருசில நாட்கள் மட்டும் தண்ணீர் வரத்து நன்றாக இருந்தது. பின்னர் மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர் குறைய தொடங்கியது.
நேற்று முன்தினம் வரை அருவிகளில் மிகவும் குறைவான தண்ணீரே விழுந்தது. இரவில் மலைப்பகுதியில் மழை பெய்ததால் முக்கிய அருவி, செண்பகாதேவி அருவி, ஐந்தருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசுகிறது. மழைக்கான அறிகுறி இருப்பதால் அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.