குற்றால அருவிகளில் நீர் கொட்டுவது இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கிவிட்டது. பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்தனர்.
குற்றாலம் சீசன் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்கியதால் குற்றாலத்திலும் சீசன் ஒரு வாரத்துக்குமுன்பே தொடங்கிவிட்டது.
நேற்று காலை முதல் பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐந்தருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. பழைய குற்றாலத்தில் மட்டும் இன்னும் தண்ணீர் விழவில்லை. குற்றாலத்தில் நேற்று தென்றலுடன் சாரல் பெய்தது.
பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. முக்கிய அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வழக்கமாக ஜூன் மாதம் சீசன் துவங்கும் நேரத்தில் தான் கோடை விடுமுறையும் முடிந்து பள்ளிகளும் திறக்கப்படும். இதனால் குற்றாலத்தில் சீசன் தொடங்கும் போது சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும். கோடை விடுமுறையிலேயே சீசன் தொடங்கியதால் முதல்நாளில் இருந்தே கூட்டம் களைகட்டியுள்ளது.