தென்காசி, குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கத்ரி வெயில் துவங்கியதையடுத்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில் குற்றாலம், தென்காசி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென இடி மின்னலுடன் கன மழை பெய்தது. 2 மணி நேரம் பெய்த இந்த கன மழையால் அப்பகுதி குளிர்ந்தது.
கன மழை காரணமாக குற்றாலம் முக்கிய அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நேற்று தண்ணீர் கொட்டியது. இதனால் நேற்று குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.