எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
என்ற பாரதிதாசனின் பாடலிற்கு அடிப்படையாகவும், தமிழரின் வாழ்வியல் மேன்மைக்கு ஆதாரமாகவும், கட்டுமானக் கலைக்கு ஒரு பாரம்பரிய சான்றாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது கல்லணை.
webdunia photo
WD
முற்கால சோழப் பேரரசர் கரிகாலன், சற்றேறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை, நெற்களஞ்சியமாம் தஞ்சைத் தரணியின் வளத்திற்கு இன்றளவும் ஆதாரமாகத் திகழ்கிறது.
காவிரி நதியின் குறுக்கே 1080 அடி நீளத்திற்கும், 60 அகலத்திற்கும் பெரும் பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கல்லணை (கல்+அணை), உலகில் கட்டப்பட்ட முதல் அணை எனும் பெருமையைப் பெற்றதாகும்.
காவிரி நதியின் குறுக்கே கல்லணையைக் கட்டியதன் மூலம், அந்நதியின் நீரின் ஒரு பகுதியை பாசனத்திற்கு நீரின்றி வறண்ட தஞ்சை பெரும்பகுதிகளுக்கு கொண்டு சென்றுள்ளார் பேரரசர் கரிகாலன். இதனாலேயே இவருடைய பெயருக்குப் பின்னால் ஒரு பெருமை அடைமொழியாக ‘பெருவளத்தார்’ என்று சேர்ந்து இவர் கரிகால் பெருவளத்தான் என்றே வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளார்.
காலத்தால் முதன்மையானது என்பது மட்டுமின்றி, கல்லணையின் பெருமைக்கு மற்றொரு பெரிய காரணம், அதனைக் கட்ட கையாண்ட முறையாகும்.
webdunia photo
WD
இன்றுபோல் தொழில்நுட்பச் சாதனங்களும், கருவிகளும் அறியப்படாத அக்காலத்தில், பெரும் பாறைகளைக் கொண்டுவந்து, காவிரி ஆற்றின் ஒரு கரையிலிருந்து அவைகளை ஆற்றிற்குள் உருட்டிவிட்டு, உருண்டு சென்று ஆற்றுக்குள் அமிழ்ந்துபோன பாறைகளின் மீது மேலும் பாறைகளை உருட்டி, ஆற்றின் நீரோட்டத்தின் அளவிற்கும் அதிகமான உயரத்திற்கு ஒரு தடையை ஏற்படுத்தி, அதனையே பாதையாக்கி, ஆற்றின் மறுகரை வரை பாறைகளை உருட்டி நிரவியே கல்லணை கட்டப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட கட்டுமானத்திற்கு இன்றைய தொழில்நுட்பப் பெயர் என்ட் ஆன் மெத்தட் (End-on-Method) என்பதாகும். இந்த முறையில்தான் தற்காலத்தில் துறைமுகங்கள் கட்டப்படுகின்றன. கப்பல்கள் வந்து நிற்கும் துறைகளில் கடல் அலைகள் தாக்காமிலிருக்க, இரண்டு கைகளால் அரவணைப்பது போன்று துறைமுகச் சுவர்கள் கட்டப்படும். அவைகளை கட்டுவதற்கு, கரையிலிருந்து பெரும் பாறைகளை கடலில் உருட்டி விடுவார்கள்.
அந்தப் பாறைகள் ஒவ்வொன்றும் கடலில் அமிழ்ந்து உறுதியாக நிற்கும். அதன் மீது மேலும் மேலும் பாறைகளை உருட்டி மேடாக்கி, நீண்ட சுவர்போல எழுப்பி, அதனையே பாதையாக்கி மேலும் பாறைகளை கொண்டு சென்று உருட்டிவிடுவர். இந்த முறையில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது என்று அதனை 19வது நூற்றாண்டில் பார்வையிட்டு அசந்துபோன வெள்ளைய பொறியாளர் ஆர்தர் காட்டன் கூறினார்.
webdunia photo
WD
இந்த ஆர்தர் காட்டன்தான், காவிரியில் இருந்து கொள்ளிடத்திற்குப் பாயும் நீரையும் கட்டுப்படுத்தித் திறந்துவிட மதகுகளை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பெரிய அணை என்றும் அழைக்கப்படும் கல்லணையின் மீது பிற்காலத்தில் மதகுகள் எழுப்பப்பட்டு, கூடுதலாக வரும் நீர் அளவோடு பாசனத்திற்குத் திறந்துவிடப்பட்டது.
அன்றைக்கு கரிகாலன் கட்டிய கல்லணை இன்று பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்டு, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் என்று 4 வழியாக பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது. காவிரியில் நீர்வரத்து குறையும் காலங்களில் முறைவைத்து நீர் திறந்து சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்துதலும் நடைமுறையில் உள்ளது.
கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணையை நேரில் சென்று பார்த்தால்தான் புரியும் எவ்வளவு பெரிய சாதனை அதுவென்பது. கல்லணை இன்று சுற்றுலாத் தலமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அழகிய பூங்காவுடன் காவிரிக் கரையில் ஒரு நாள் பொழுதை கழிக்க உகந்த சுற்றுலாத் தலம் இது.
எப்படிச் செல்வது :
திருச்சியிலிருந்து 17 கி.மீ. தூரத்திலுள்ளது. அரசு பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றது.