எப்போதும் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்
வியாழன், 11 நவம்பர் 2010 (15:54 IST)
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபம் இனி ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்வோர் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலகப் புகழ்பெற்ற தலமாகும். இந்த கோயிலில் அமைந்துள்ள சிற்பங்கள், கோயில் அமைந்திருக்கும் கட்டிட அமைப்பு ஆகியவை ரங்கநாதர் கோயிலின் சிறப்பம்சங்களாகும். இதனைக் காண தினமும் ஏராளமான பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த கோயிலுக்கு வருகின்றனர்.
இந்த கோயிலில் உள்ள சேஷராய மண்டபத்தில் உள்ள அரிய சிற்பங்களை மட்டுமே பக்தர்களும், பயணிகளும் காண முடியும். ஆயிரங்கால் மண்டபத்தைக் காண இயலாது. ஏனெனில், ஆயிரங்கால் மண்டபம் வைகுண்ட ஏகாதசியையொட்டி நடைபெறும் ராபத்து நிகழ்ச்சியின் போது 10 நாட்களுக்கு மட்டுமே ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும். அந்த நாட்களிலும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே ஆயிரங்கால் மண்டபத்திற்குள் அனுமதிக்ப்படுவார்கள். மற்ற நாட்களில் ஆயிரங்கால் மண்டபம் மூடப்பட்டே இருக்கும். இதனால் வெளிநாட்டுப் பயணிகள் ஏமாற்றம் அடைவார்கள்.
இந்த நிலையில், ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பக்கம் மணல் வெளியில் உள்ள நான்கு கால் மண்டபங்கள் மூன்றின் தரை தளத்தை காண மணல்களை அகற்றியபோது, ஆயிரங்கால் மண்டபத்தில் முகப்பில் 11 படிகளும், 2 அடி உயரமுள்ள நடன சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேப் போல, ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்கு திசையில் நிரம்பி இருந்த மணல்களை அகற்றிய போது பெருமாளின் திருவடி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், ஆயிரங்கால் மண்டபத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கிரில் கேட் அகற்றப்பட்டுள்ளது. இனி ஆண்டு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தை பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.