ஊட்டியில் தற்போது இரண்டாவது சுற்றுலா சீசன் துவங்கியுள்ளது. தமிழகம் மற்றும் சில மாநிலங்களில் கொளுத்தும் வெயிலைத் தாங்க முடியாத மக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு படை எடுத்துள்ளனர்.
ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் முதல் சீசன் துவங்கும். மே முதல் ஜூன் வரையிலும் நீடிக்கும் ஊட்டி சீசன் காலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
அதற்கு அடுத்தாற்போல, செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது சீசன் துவங்கும். இந்த ஆண்டும் ஊட்டியில் தற்போது 2வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்த சீசன் காலத்தை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5,000 தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்திலும் தற்போது பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் கண்களைக் கவரும் வகையில் இவை அமைந்துள்ளன.