தமிழ்நாட்டிற்கு இயற்கை அளித்த கொடை என்று கருதப்படும் நீலகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ள முக்குருத்தி வனப் பகுதியுடன் இணைந்தது வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் ஆகும்.
தமிழக - கேரள எல்லையில் உள்ள முழுமையாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது வெஸ்டர்ன் கேட்ச்மன்ட். இப்பகுதி வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் 1, 2, 3 என மூன்று பகுதிகளாக உள்ளது.
தமிழ்நாட்டிலேயே இங்குதான் அதிகமான மழைப் பொழிவு உள்ளதால் இதனை வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் (மேற்கு மழைப் பொழிவு பகுதி) என்று அழைக்கின்றனர்.
பவானி உள்ளிட்ட பல நதிகள் உற்பத்தியாகும் இந்த வெஸ்டர்ன் கேட்ச்மன்ட்டில் கிடைக்கும் நீரினால்தான் இப்பகுதியில் அமைந்துள்ள குந்தா உள்ளிட்ட பல நீர் மின் நிலையங்கள் இயங்குகின்றன.
இங்கு பொழியும் மழையில் கிடைக்கும் நீர் ஆங்காங்கு அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு, சில இடங்களில் சுரங்கங்கள் வழியாக அணைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
மனிதர்கள் அண்ட முடியாத இந்த வனப்பகுதி, அனுமதி பெற்று சென்று பார்த்தவர்களின் எண்ணங்களில் இருந்து என்றென்றும் அகலாது. இயற்கை எழில் கரைபடாமல் மிளிரும் அற்புத பூமி அது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வனச்சரகம் வழியாக குந்தா சென்று அங்கிருந்து மேலும் 28 கி.மீ. ஆள் நடமாட்டமே இல்லாத (தேயிலைத் தோட்டங்கள் தவிர) சாலைகளில் பயணம் செய்தால் நாம் அடையும் இடம் மேல் பவானி.
பவானி நதி உற்பத்தியாகின்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள அணையில்தான் அதிகமான அளவிற்கு நீர் தேக்கப்பட்டு மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.
webdunia photo
WD
இந்த அணை அமைந்துள்ள பகுதி அவ்வளவு அற்புதமானது. அங்குள்ள தமிழ்நாடு மின்வாரியத்தின் கண்காணிப்பு இல்லத்திற்கு முன் உள்ள புல்மேட்டில் இருந்து அணையைப் பார்க்க வேண்டும். நெடுதுயர்ந்த மலைகள், நடுவில் அணை, சுற்றிலும் பச்சைப் பசேலென அடர்த்தியாக வளர்ந்த மரங்கள். எங்கு காணினும் பசுமை எப்போதும் ஈரம். நீங்கள் நின்று பார்க்கும் அந்த இடம் 8,000 அடி உயரமாகும்.
முக்குருத்தி வனப்பகுதி
webdunia photo
WD
அங்கிருந்து (வனத்துறையின் அனுமதி பெற்று) முக்குருத்தி காட்டிற்குள் (மின்வாரியம் அமைந்துள்ள சாலையின் வழியாக) சென்றால் சிறிது தூரத்தில் மடிப்பு மலை என்று அழைக்கப்படும் வளைவு வளைவாய் அமைந்துள்ள மலைப் பகுதியைக் காணலாம். இந்த மலைப் பாறைகள் மிகக் கடினமானதானதால் வெறும் புற்கள் மட்டுமே முளைத்து தனி எழிலுடன் காணப்படுகின்றன. அந்த இடத்தில் மட்டும் ஓரிரு மணி நேரங்கள் மகிழ்ச்சியாக கழிக்கலாம்.
அங்கிருந்து மேலும் 2 கி.மீ. பயணம் செய்தால் மேல் பவானி அணையின் மற்றொரு பகுதிக்கு வரலாம். கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அந்த இடத்தில் இருந்து மீண்டும் தமிழக மின் வாரியத்தின் சாலையில் ஒரு அரை மணி நேரம் பயணித்தால் (பயங்கரமான பயணம்தான்) நீங்கள் அழகிய முக்குருத்தி வனப்பகுதியை அடைவீர்கள்.
எப்போதும் சாறலுடன் தூறிக் கொண்டிருக்கும் மழைக்கு இடையே நீங்கள் காணும் தாவரங்கள் வேறு எங்கேயும் கண்டிருக்க முடியாது. அவ்வளவு பசுமையாய், கண்ணிற்கு குளிர்ச்சியாய், சிறிதும் பெரிதுமாக பல குற்று மரங்கள், செடிகள்... அந்த அழகிற்கு ஈடேது.
அங்கே இருந்து மறு பகுதிக்கு கீழிறங்கி வந்தால் ஒரு குளிர்ந்த நீரோடையைக் காணலாம். மழைப் பொழிவால் அந்த ஓடையில் பெருக்கெடுக்கும் தண்ணீர் அங்குள்ள சுரங்கம் வழியாக மலையின் மறுபக்கத்தில் உள்ள அவலாஞ் அணைக்குச் செல்கிறது.
webdunia photo
WD
இந்த ஓடையில் வெள்ளையர்கள் கொண்டு வந்த வளர்த்துவிட்ட டிரெளட் எனும் அரிய வகை மீனினம் உள்ளது. நீரின் போக்கிற்கு எதிராக நீந்தக் கூடிய மீனினம் இது. இதன் உடலில் வானவில்லைப் போன்ற வண்ணங்கள்... நிச்சயம் கொல்லத் தோன்றாது.
இங்கு புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டுப் பன்றிகள், செந்நாய்கள் என்று எல்லா விலங்கினங்களும் உண்டு. கூட்டமாகத்தான் செல்ல வேண்டும். தங்கும் வசதி ஏதும் இல்லை. தலைகுந்தாவில் தங்கி அங்கிருந்துதான் மேல் பவானிக்கு வர வேண்டும். ஆனால் நமது வாழ்வில் (எப்பாடுபட்டாவது அனுமதி பெற்று) நிச்சயம் காண வேண்டிய இடம் வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் 3.