பிரமாண்டமான படம் என்பது ரசிகர்களை ஏமாற்றும் வேலை என்றும், ஒரு படத்தின் கதை மற்றும் அதில் நடிக்கும் நட்சத்திரங்களின் நடிப்பு நன்றாக இருந்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதையும், பெரும் பிரம்மாண்டத்தை வைத்துக்கொண்டு ஒரு படத்தை வெற்றிப்படமாக மாற்ற முடியாது என்பதையும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
"நான் நடித்த கடைசி விவசாயி என்ற திரைப்படம் மொத்தமாகவே வெறும் 65 லட்சம் ரூபாய் தான் திரையரங்குகளில் வசூல் செய்தது. ஆனாலும், இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது அந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளது.
ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்து, '300 கோடி' அல்லது '400 கோடியில் படம் எடுக்கிறேன்' என்றால், உடனே பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த படத்தில் நானும் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். அந்த படத்தின் கதை, இயக்குனரின் தரம், எனது கேரக்டர் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகுதான் படத்தில் நடிப்பேன்.
பெரிய பட்ஜெட் படம் என்பது ஒரு மாயை. அதில் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. நல்ல கதை அம்சம் கொண்ட படங்களே வெற்றி பெறும். பிரம்மாண்டம் மட்டும் ஒரு படத்தை வெற்றிப்படமாக மாற்ற முடியாது," என்று அவர் தெரிவித்துள்ளார்.