சமீபகாலமாக பழைய படங்களின் ரி ரிலீஸ் அதிகளவில் நடந்து வருகிறது. புதுப்படங்களின் வரவேற்புக் குறைவாக உள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகள் இதுபோல பழைய படங்களை ரி ரிலீஸ் செய்கின்றனர். புது படங்கள் ஓடாததுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் பழைய படங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர் என்பதே அதிக படங்கள் ரி ரிலீஸ் ஆகக் காரணம்.
சமீபத்தில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன், அஜித்தின் வாலி ஆகிய திரைப்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன. இவற்றில் உச்சமாக விஜய்யின் கில்லி திரைப்படம் ரி ரிலீஸில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
இந்நிலையில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வந்தால் ரிலீஸாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதையொட்டி அந்த படத்தை தரமுயர்த்தி ரி ரிலீஸ் செய்யவுள்ளார் தயாரிப்பாளர் தாணு. இதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் நடித்த சச்சின் படம் ரிலீஸின் போது வெற்றிப்படமாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.