ஒவ்வொரு வருடமும் வெளியாகும் தமிழ்ப் படங்களில் சிறந்த படம், நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குவது விஜய் டிவியின் வழக்கம். 9 வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்ற இந்த விழா, சில பிரச்னைகளால் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை.
ஆனால், இந்த வருடம் 10வது ஆண்டாக விழாவை நடத்தத் திட்டமிட்டது விஜய் டிவி. இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், அனுராக் கஷ்யப், யூகிசேது மற்றும் நடிகை ராதா ஆகிய 5 பேரும் இந்த வருடத்துக்கான விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கடந்த 26ஆம் தேதி (சனிக்கிழமை) இந்த விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வருகிற ஜூன் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.