தமிழில் சொற்களுக்கா பஞ்சம்… படத் தலைப்புகளைப் பார்க்கும் போது வெட்கப்படுகிறேன் – வைரமுத்து!

vinoth

செவ்வாய், 28 மே 2024 (08:09 IST)
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் இரு பெரும் ஜாம்பவான்களாக வலம் வந்தவர்கள் இளையராஜாவும் வைரமுத்துவும். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் இன்றளவும் செவ்வியல் பாடல்களாக உள்ளன. ஆனால் இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்தனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. திரைத்துறைய சேர்ந்த எத்தனையோ பேர் இருவரையும் மீண்டும் இணைத்து வைக்க முயன்றும் அது நடக்கவில்லை.

அதன்பின்னர் வைரமுத்து மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து கம்பேக் கொடுத்தார். 90 களில் பல வெற்றிப் பாடல்களை அவர் எழுதினார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மி டூ சர்ச்சையில் சிக்கிய பின்னர் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அவரின் ஆஸ்தான இயக்குனரான மணிரத்னம் கூட அவரை தன் படத்தில் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து தற்போது படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படுவது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “தற்போது படங்களுக்கு வைக்கப்படும் தலைப்புகளைப் பார்த்தால் துக்கப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். தமிழில் சொற்களுக்கா பஞ்சம். சொல்லாடல்களா இல்லை. தலைப்பு என்றால் படித்தவுடன் இருதயத்தில் பசை போல ஒட்டிக் கொள்ள வேண்டாமா” என பேசியுள்ளார். சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கே, தக் லைஃப், கோட், குட் பேட் அக்லி என ஆங்கில சொற்கள் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்