ஓட்டுக்காக தேவர் மகன் 2-வது பாகமா? – கமலுக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி
திங்கள், 15 அக்டோபர் 2018 (12:26 IST)
கமல் அரசியல் கட்சி தொடங்கி விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் வேளையில் தனது அடுத்த படமாக தேவர் மகன் 2-வது பாகத்தை அறிவித்துள்ளார்.
ஜெயலிலிதா மறைவு மற்றும் கருணாநிதியின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகியிருந்த சூழ்நிலையில் கமல் தன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அவரின் இந்த திடீர் பிரவேசத்திற்கு அதிமுக ஆட்சியின் மீது அவருக்கிருந்த தனிப்பட்ட கோபமும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. 2013 ஆம் ஆண்டு அவரது விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டுக்கு அதிமுக அரசு முட்டுக்கட்டைப் போட்டது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் இறங்கிய பின் பரபரப்பாக செயல்பட்டு வந்தார் கமல்ஹாச்ன். ஒரு பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் தமிழக குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தன்னையும் தன் அரசியல் கருத்துகளையும் கொண்டு சேர்த்தார். மறுபக்கம் ஊர் ஊராக சென்று அரசியல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
தன்னை முற்போக்குவாதியாக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் மத்திய அரசை இதுவரை விமர்சிக்காமல் மாநில அரசை மட்டுமே விமர்சித்து வருகிறார். பாஜக உடனான கூட்டணிப் பற்றியும் மழுப்பலானப் பதிலையே கூறி வருகிறார். எனவே சமூக வலைதளங்களில் கமலுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறதோ அந்த அளவுக்கு அவரின் மீதான விமர்சனமும் வந்து கொண்டேதான் இருக்கிறது.
இதற்கிடையில் கமிலின் விஸ்வரூபம் பார்ட் 2 வெளியாகி எந்தவொரு அதிர்வுகளையும் எழுப்பாமல் சென்று விட்டது. கமல் கையில் ஏற்கனவே அறிவித்திருந்த சபாஷ் நாயுடு மற்றும் இந்தியன் 2 படங்கள் இருக்கின்றன. தற்போது புதிதாக தேவர் மகன் 2 படம் உருவாகி வருவதாகவும் அதில் தான் நடிக்க இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து நெட்டிசன்கள் மத்தியில் கமல் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
25 ஆண்டுகளுக்கு முன் வெளியான தேவர் மகன் படம் கமல் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான வெற்றித் திரைப்படம். ஆனால் அந்தப் படம் நிலப்பிரபுத்துவக் கருத்துகளைத் தூக்கிப் பிடிப்பதாகவும் குறிப்பாக ஒரு சாதியை உயர்த்திப் பிடித்து புகழ்வதாகவும் முற்போக்காளர்கள் இன்று வரை அந்தப் படத்தை விமர்சித்து வருகின்றனர்.
எனவே தற்போது இந்த வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ஒரு குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளைப் பெறுவதற்கான மலினமான ஒரு செயல் என்றும் கமல் ஒரு போலி முற்போக்குவாதி என்றும் சமூக வலைதளங்களில் விவாதம் உருவாகியுள்ளது.