மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனரான நெல்சன்தான் அந்த படத்தின் இயக்குனராக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் காமெடி அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக முழு நகைச்சுவை படத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதால் இந்த கதைக்கு உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
ஆனால் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகாத நிலையில் நேற்று அதை உறுதி செய்துள்ளது சன் பிக்சர்ஸ். அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் சன் தொலைக்காட்சி அலுவலகத்தில் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை சந்தித்து பேசுகின்றனர். இந்த படத்துக்கான மோஷன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆனால் முன்னதாக இந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்த போது இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனவர் இசையமைப்பாளர் தமன். இந்த படத்துக்காக அவர் ஒரு பாடலையும் பதிவு செய்து அதை விஜய்க்கும் போட்டு காட்டி ஓ கே வாங்கி இருந்தார். ஆனால் முருகதாஸ் வெளியேறி நெல்சன் உள்ளே வந்த பின்னர் அவரின் நெருங்கிய நண்பரான அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் தமன் விஜய் படத்துக்கு இசையமைக்கும் தனது ஆசை நிராசையானதால் அதிருப்தியில் இருந்தார் என சொல்லப்பட்டது.