ஒன்லைன் கதை கூறியும் கண்டுகொள்ளாத சூர்யா: பிரபல இயக்குனர் வருத்தம்

வியாழன், 5 டிசம்பர் 2019 (08:42 IST)
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பணிபுரிந்து வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘குயின், மற்றும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களிலும், இன்னொரு படத்தின் ஆரம்ப கட்ட பணியிலும் அவர் உள்ளார்.
 
இந்த நிலையில் சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி தருவதாக அவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு வாக்குக் கொடுத்திருந்த நிலையில் சூர்யாவின் கால்ஷீட்டுக்காக அவர் அலைந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் சூர்யா, கௌதம் மேனனை கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது 
 
பொதுவாக கவுதம் மேனன் தனது படத்தின் கதையை எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கூறமாட்டார். வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கியபோது கமல்ஹாசனுக்கும், என்னை அறிந்தால் படத்தை இயக்கியபோது அஜித்துக்கும் முழு கதையை அவர் கூறவில்லை என்பதும் குறிப்பாக படப்பிடிப்பு தொடங்கி பாதி நிறைவு பெற்ற பின்னரும் அவர் கிளைமாக்ஸ் காட்சியை முடிவு செய்யாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் சூர்யாவின் கால்ஷீட் பெறுவதற்காக அவரிடம் முழு கதையை கூறியது மட்டுமின்றி ஊடகங்களிலும் அவர் சூர்யாவுக்காக தயார் செய்து வைத்திருந்த ஒன்லைன் கதையை கூறியுள்ளார். சூர்யா தனது கதையில் இசை கலைஞராக நடிக்க இருப்பதாகவும் இந்த கதை சூர்யாவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறியதாக தெரிகிறது
 
கௌதம்மேனன் இவ்வளவு தூரம் இறங்கி வந்தும் சூர்யா அவரை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அவர் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் கௌதம் மேனனுக்கு அவர் படம் நடித்து கொடுப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்