நயன்தாரா, தமன்னா கோபத்திற்கு அடிபணிந்த சுராஜ்

திங்கள், 26 டிசம்பர் 2016 (19:52 IST)
நடிகைகள் ஆடை குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் கருத்தை கூறிய இயக்குனர் சுராஜ் மீது நயன்தாரா மற்றும் தமன்னா கடும் கோபத்தை கொட்டினர். இதையடுத்து சுராஜ் நடிகை தமன்னா உட்பட அனைவரிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.


 

 
கத்திச் சண்டை படத்தின் இயக்குனர் சுராஜ் நடிகைகள் ஆடைய பற்றிய கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக மாறியது. நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது என்றும், கிளாமராக நடித்தவர்கள்தான் இன்று பெரிய நாயகியாக இருக்கிறார்கள், என்றும் கூறினார்.
 
இவரின் இந்த கருத்துக்கு நடிகைகள் நயன்தாரா மற்றும் தமன்னா ஆகியோர் கடும் கோபத்தை கொட்டி பதில் அளித்துள்ளனர். இதுகுறித்து நயன்தாரா கூறியதாவது:- 
 
நடிகைகள் கவர்ச்சி உடைகளை அவர்களுக்கு சவுகரியமாக இருக்கும் போதும் கதைக்குத் தேவைப்பட்டால் மட்டுமே அணிந்து கொள்கின்றனர். நடிகைகளை கவர்ச்சிப் பொம்மைகளாக பார்க்கவே பணம் செலவழித்து திரைப்படத்திற்கு வருவதாக அவர் எந்த ரசிகர்களை மனதில் கொண்டு கூறுகிறார்? நடிகைகள் என்றால் இப்படித்தான் என்று நினைக்க யாருக்கும் உரிமை கிடையாது" என்று தெரிவித்துள்ளார் 
 
தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
எனது இயக்குநர் சுராஜ் நடிகைகள் பற்றி தெரிவித்த கருத்துகள் எனக்கு கடும் கோபமூட்டுவதோடு காயப்படுத்துகிறது. அவர் இதற்காக என்னிடம் மட்டுமல்ல திரைத்துறையில் பணியாற்றும் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.நாங்கள் நடிகைகள், ரசிகர்களை உற்சாகப்படுத்தவே நடிக்கிறோம். ஆனால் அதற்காக எந்த ஒரு நிலையிலும் எங்களை காட்சிப் பொம்மைகளாக, பொருட்களாக்கக் கூடாது, என்று பதிவிட்டுள்ளார்.
 
இதையடுத்து இயக்குநர் சுராஜ் மதிப்பிற்குரிய பத்திரிக்கையாளர்களே என்று மன்னிப்பு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில், என்னை மன்னியுங்கள், செல்வி தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளும் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு யாரை பற்றியும் தவறாக பேசி அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மனிக்கவும், என்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்.
 
இவ்வாறு மன்னிப்பு கடிதம் ஒன்றை பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்