இயக்குநர் சுந்தர் சி நேற்று அளித்த பேட்டி ஒன்றில் ’ சில இயக்குனர்கள் பெரிய ஹீரோ படஙகளை இயக்கும்போது ஹீரோக்களை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையை தயாரிப்பாளரின் தயாரிப்பு செலவில் காட்டுவதில்லை என்றும், ஹீரோவைத் உற்சாகப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும் இதனால் அளவுக்கு அதிகமான பட்ஜெட்டில் படத்தின் தயாரிப்பு செலவு செல்வதாகவும், இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைகின்றனர். ஹீரோ கைகாட்டுபவர்தான் இயக்குனர் என்பதால் அந்த ஹீரோவை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்க இயக்குனர்கள் சாதாரண பட்ஜெட்டில் முடியவேண்டிய படத்தை பிரமாண்டம் என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படமாக மாற்றிவிடுகின்றனர்’ எனத் தெரிவித்தார்.
சுந்தர் சி தனது கனவுப்படமான சங்கமித்ராவை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார். இதற்காக முன் தயாரிப்பு வேலைகள் ஓராண்டாக நடந்து கொண்டிருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் கடன் சுமைக் காரணமாக அந்தப் படம் பாதியில் நின்றது. சங்கமித்ராவைத் தயாரிக்க இருந்த நிறுவனம் விஜய் நடிப்ப்பில் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல் படத்தைத் தயாரித்த அதே நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ்தான். மெர்சல் படத்தை சொன்ன பட்ஜெட்டை விட பல கோடி அதிகமான செலவில் எடுக்கப்பட்டதால் தயாரிப்பு நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதற்குக் காரணம் அட்லிதான் என சொல்லப்படுகிறது. அதன் பின் தேனாண்டாள் பிலிம்ஸ் எந்தவொரு தயாரிப்புப் பணிகளையும் செய்யாமல் முடங்கிக் கிடக்கிறது. தன் சங்கமித்ரா படம் தொடங்கப்படாததற்கு அட்லியும் ஒரு காரணம் என்பதால் சுந்தர் சி தனது ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தி இருக்கலாம்.