'குட் நைட்' படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருந்த நிலையில், இந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது 'பராசக்தி' மற்றும் 'மதராஸி' ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் படம் என்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்த படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க விநாயக் சந்திரசேகரிடம் சிவகார்த்திகேயன் கூறியதாகவும், புஷ்கர் - காயத்ரி இயக்கும் படத்தில் தான் அடுத்ததாக அவர் நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது.
ஆனால், சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இது குறித்து விசாரித்தபோது, இந்த தகவல் முழுக்க முழுக்கப் பொய் என்றும், புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மை என்றாலும், அந்த படம் இப்போதைக்கு இல்லை என்றும், அவருடைய அடுத்த படம் விநாயக் சந்திரசேகர் படம்தான் என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.