மீண்டும் சிம்பு படத்திற்குத் தடை? –விடாமல் துரத்தும் அ.அ.அ தயாரிப்பாளர்

செவ்வாய், 13 நவம்பர் 2018 (07:58 IST)
சிம்புவுக்கும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் இடையில் உள்ள பிரச்சனை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

சிம்பு  நடிப்பில் கடந்த ஆண்டு அ.அ.அ படம் மட்டுமே வெளியானது. அதுவும் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னே ரிலீஸ் ஆனது. பெருத்த ஏமாற்றத்தை அளித்த அந்த படம் வசூலிலும் ஒரு சூறாவளியாக அமைந்துவிட்டது. கிட்டதட்ட இருபது கோடி ரூபாய் அளவுக்கு அந்த படத்தின்  மூலம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பு உருவானது. ஆனால் அதுபற்றி சிம்புவோ தயாரிப்பாளரோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

படம் ரிலிஸாகி எல்லோரும் அப்படி ஒரு படம் வந்ததையே மறந்துவிட்ட ஒரு நன்னாளில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய தயாரிப்பாளர்‘ சிம்பு இந்த படத்துக்காக 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் முழுதாக 30 நாட்கள் கூட நடித்துத் தரவில்லை. அதுமட்டுமல்லாமல் டப்பிங் பேசக்கூட வராமல் என் வீட்டு பாத்ரூமிலேயே பேசலாம் என்று கூறினார். இந்தப்படத்தின் மூலம் எனக்கு 20 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை சிம்பு திருப்பித்தர வேண்டும்’ என வேண்டுகோள் வைத்தார்.

இது சம்மந்தமாக புகார் ஒன்றையும் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்தார். ஆனால் எந்த சங்கமும் இன்னும் அவருக்கான நியாயத்தைப் பெற்றுத்தரவில்லை. அதன் பின் சிம்பு நடிப்பில் செக்கச் சிவந்த வானம் படமும் வெளியாகி விட்டது. அடுத்ததாக அவர் நடிப்பில் வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் வேகமாக தயாராகி பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த படத்தைத் தடை செய்ய வேண்டுமென அ.அ.அ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஓரிரு நாளில் இந்த பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்