அந்நியன் ரீமேக்: தயாரிப்பாளர் குற்றச்சாட்டுக்கு ஷங்கர் பதில்

வியாழன், 15 ஏப்ரல் 2021 (19:08 IST)
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்ய கூடாது என ஷங்கருக்கு இமெயில் அனுப்பி இருந்தார் இதற்கு சங்கர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது
 
அந்நியன்' திரைப்படத்தின் கதைக்கு நீங்கள் உரிமை கோரிய மின்னஞ்சலைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். 'அந்நியன்' 2005-ம் ஆண்டு வெளியானது. படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, படத்தின் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படம் வெளியானது.
 
இந்த படத்தின் திரைக்கதையை எழுத யாரையும் நான் எழுத்துபூர்வமாக நியமிக்கவில்லை. எனவே, இந்தத் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும் எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.
 
மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவர் இந்தப் படத்துக்கு வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.
 
திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்குள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் கோர முடியாது. படத்தை ரீமேக் செய்யவும் முடியாது. ஏனென்றால் அந்த உரிமை எழுத்துபூர்வமாக உங்களுக்குத் தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை.
 
ஒரு தயாரிப்பாளராக, 'அந்நியன்' படத்தின் மூலம் கணிசமாக லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையில்லாமல், உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் அநியாயமாக உங்களுக்கு ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள்.
 
இந்த விளக்கத்துக்குப் பிறகாவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களைத் தேவையின்றி பேச மாட்டீர்கள் என்று என்னால் மட்டுமே நம்பமுடியும்.
 
இதுபோன்ற மோசமான, சட்டவிரோதமான உரிமை கோரல்களால் எனது எதிர்கால திரைப்படங்களைப் பாதிக்க முயலும் நிலையில் ஒரு இயக்குநராக, கதாசிரியராக உண்மையான நிலை குறித்த தெளிவைத் தரவே எந்தவித பாரபட்சமும் இன்றி இந்த பதில் அளிக்கப்பட்டிருக்கிறது."
 
இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்