தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பாடகர்களுக்கான வாய்ப்புகள் சரியாகக் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலானப் பாடல்களை இசையமைப்பாளர்களே பாடி விடுகின்றனர். அப்படி இல்லையென்றால் பாடலுக்கு சம்மந்தமே இல்லாத நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோரைப் பாடவைத்து பாடலை பிரபலமாக்குகின்றனர்.
அதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கலக்கி வந்த பாடகர்களான க்ரிஷ், கார்த்தி, நரேஷ் ஐயர் போன்ற பிரபல பாடகர்களுக்கே வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் கணிசமான எண்ணிக்கையில் ஹிட் பாடல்கள் பாடி இருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்த சத்யன் மகாலிங்கம் சமூகவலைதளங்களில் திடீரென வைரல் ஆகி வருகிறார். மேடை ஒன்றில் காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற ரோஜா ரோஜா பாடலை அசாத்தியமாக அவர் பாடிய வீடியோ அவரை மீண்டும் புகழ்வெளிச்சத்துக் கொண்டு வந்துள்ளது.