அடுத்த 1000 கோடி வசூல் தயார்!? சாமியாட்டம் போட வைத்த ரிஷப் ஷெட்டி! - காந்தாரா 2 திரைவிமர்சனம்!

Prasanth K

வெள்ளி, 3 அக்டோபர் 2025 (10:25 IST)

கன்னட திரையுலகில் கேஜிஎஃப் உள்ளிட்ட 1000 கோடி வசூல் ஹிட் படங்களை கொடுத்த ஹொம்பாலே நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக களம் இறங்கியுள்ளது காந்தாரா 2.

 

2022ல் வெளியாகி ஹிட் அடித்த காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகியுள்ள காந்தாரா 2 (சாப்டர் 1) என்றே பெயரிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டியே இந்த படத்தையும் இயக்கி நடித்துள்ளார். ருக்மிணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலரும் உடன் நடித்துள்ளனர்.

 

பல காலத்திற்கு முன் அரச காலத்தில் நடக்கும் சம்பவமாக கதை விரிகிறது. மக்களை காக்க ஈஸ்வரனின் பூத கணங்கள் காந்தார காட்டிற்குள்ளேதான் முதல் முதலாக இறங்குகின்றன. காந்தாரா தலைவனான பெர்மெ (ரிஷப் ஷெட்டி) காந்தாராவை தாண்டி சென்று அங்குள்ள ராஜ்ஜியங்களை கண்டு அவற்றோடு வணிகம் செய்து தனது கிராமத்தை முன்னேற்ற நினைக்கிறான். கதம்பர் வம்ச ஆட்சியில் குலசேகரன் என்ற அரசன் அரசாண்டு வருகிறான்.

 

அவனது படைகள் ஒரு சமயம் காந்தாரா காட்டுக்குள் வரும்போது அவர்களை பயன்படுத்தி கதம்பர் தேசத்திற்குள் செல்லும் பெர்மே, அங்குள்ள துறைமுகத்தில் வணிகம் செய்யும் உரிமையை பெறுவதுடன், ஒரு கட்டத்திற்கு மேல் துறைமுகத்தையும் கைப்பற்றி விடுகிறான். இதனால் குலசேகரனுக்கும், பெர்மேவுக்கும் மோதல் உருவாவது ஒருபக்கம் இருக்க, குலசேகரனின் சகோதரி கனகவதி (ருக்மிணி வசந்த்) பெர்மெவுடன் காதலில் விழுகிறாள்.

 

இந்த நடப்பு சம்பவங்கள் ஒருபக்கம் இருக்க குலசேகரனின் தாத்தா காலத்திலிருந்தே காந்தாராவை அடைய நினைத்து தோற்றக் கதை கதம்பர்களுக்கு ஒரு அவமான சின்னமாகவே தொடர்ந்து வரும் நிலையில் காந்தாராவை அடையும் முயற்சி குலசேகரன் காலத்திலும் தொடர்கிறது.

 

இதற்காக நடக்கும் சதிகளை பெர்மெ முறியடித்தானா? ஈஸ்வரனின் கனங்கள் காந்தாராவை காப்பாற்ற பெர்மெவுக்கு உதவியதா? குலசேகரனின் சதி என்ன? என்பவற்றை பரபரப்பான கதையாக சொல்லியிருக்கிறார்.

 

படத்தின் முதல் பாதி கதாப்பாத்திரங்களின் அறிமுகம், காதல், பழைய வஞ்சம் என பலவற்றை விளக்கி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி முழுக்கவே க்ளைமேக்ஸ்தான் என்பது போல ஆக்‌ஷன் அதிரடிகளுடன் பரபரக்கிறது. 

 

சும்மா 4 பேன் இந்தியா ஸ்டார்களை போட்டுவிட்டால் போதும் கதை தேவையில்லை என்று கருத்தும் இயக்குனர்கள் மத்தியில் தனது கடின உழைப்பை இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிப்படுத்தி அசர வைக்கிறார் ரிஷப் ஷெட்டி. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு பிரம்மாண்டம். பஞ்சுருளி தோன்றும் காட்சி, நெருப்பில் பூக்கும் வராஹமூர்த்தி, ஈஸ்வர கனங்கள் என பிரம்மாண்டம் மட்டுமல்லாமல், ஆன்மிக தரிசனத்தை அளிப்பது போல காட்சிபடுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசையும், பிரம்மகலசம் பாடலும் படத்திற்கு கூடுதல் பலம்.

 

முதல் பாதியில் சிறு தொய்வு இருந்தாலும், அதையெல்லாம் மறக்கடிக்க செய்யும் இரண்டாம் பாதி படத்தை பெரிய ஹிட்டாக மாற்றும் என்பது நிச்சயம். ஹொம்பாலே தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த 1000 கோடி ஹிட் படமாக இது மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்