கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றனர் சுயாதீன இசைக்கலைஞர்கள். அதில் முன்னணியில் உள்ளார் சாய் அப்யங்கர். இவர் இசையமைத்து பாடி வெளியிட்ட கட்சி சேர, ஆச கூட மற்றும் சித்திரி புத்திரி ஆகிய பாடல்கள் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றன. இவர் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ், சூர்யா நடிக்கும் சூர்யா 45 மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம், சிம்பு நடிக்கும் அவரின் 49 ஆவது மற்றும் 51 ஆவது படம் மற்றும் அட்லி அல்லு அர்ஜுன் இணையும் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர கார்த்தியின் மார்ஷல் படத்துக்கும் அவர்தான் இசை என சொல்லப்படுகிறது. தற்போது அவர் கைவசம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் அவர் அனிருத்துக்குப் போட்டியாளராக உருவாகி வருகிறார் என கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது சம்மந்தமானக் கேள்விக்குப் பதிலளித்துள்ள சாய் “நான் இப்போதுதான் என் பயணத்தைத் தொடங்கியுள்ளேன். அனிருத் எவ்வளவோ சாதித்துள்ளார். எல்லோருடைய ஆசீர்வாதத்தோடும் நான் கடினமாக உழைத்து சாதிக்க விரும்புகிறேன். அதனால் எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை” எனக் கூறியுள்ளார்.