இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே மூன்று கோடி ரூபாய் மத்திய மாநில அரசுகள் உள்பட பல அமைப்புகளுக்கு முதல்கட்ட நிவாரண நிதி வழங்கினேன். அதன்பிறகு விநியோகிஸ்தர் சங்கம், நடிகர் சங்கம், துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் ரூ.4 கோடிக்கும் மேல் நிதி உதவி செய்துள்ளேன்
இருப்பினும் தினமும் எனக்கு கடிதங்கள், வீடியோக்கள் மற்றும் பசியால் போராடிக்கொண்டிருக்கும் மக்களிடம் இருந்து தினமும் நிதி உதவி கேட்டு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் பணமாக எதையும் கேட்கவில்லை. சாப்பிட அரிசி மட்டுமே என்னிடம் கேட்டுள்ளார்கள். இந்த நிலையில் இது குறித்து நான் எனது குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் எனது நல விரும்பிகள் ஆகியோர்களிடம் ஆலோசனை செய்தேன். அவர்கள் அனைவரும் எனக்கு கூறிய ஆலோசனை என்னவென்றால் ஒரே ஒரு தனிமனிதனால் இந்த நாட்டில் உள்ள அனைவரின் பசியையும் போக்கிவிட முடியாது என்றும் அதனால் ஒரு குழுவாக அமைத்து அதன் மூலம் உதவி செய்யலாம் என்றும் கூறினார்கள். அந்த யோசனை எனக்கு சரியாக பட்டதை அடுத்து எனக்கு நெருக்கமானவர்களிடம் உதவி கேட்டேன்
முதல் கட்டமாக தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்களிடம் நேற்று நான் உதவி கேட்டபோது அவர் உடனடியாக நூறு மூட்டை அரிசியை அனுப்பி வைத்தார். இன்று ஏழை எளியவர்களுக்கு அந்த அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, ஆகியோர்களின் ரசிகர்களிடமும் அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களிடமும் உதவியை கேட்டு இருக்கின்றேன். உங்களால் முடிந்த அளவு நீங்கள் பணமாகவோ பொருளாகவோ உதவி செய்தால் அவற்றை ஏழை எளிய மக்களுக்கு என்னால் வினியோகம் செய்ய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’என்று கூறியுள்ளார். ராகவா லாரன்சின் இந்த முயற்சி பெரும் பாராட்டுக்குரியது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்