ஞானவேல் ராஜாவுக்கு எச்சரிக்கை – கமல் தரப்பில் மேலும் ஒரு அறிக்கை !

ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (07:10 IST)
கமல் தன்னிடம் 10 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற்றுவதாக புகார் அளித்துள்ள ஞானவேல்ராஜாவை எச்சரிக்கும் விதமாக ராஜ்கமல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தம வில்லன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்து எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ’உத்தம வில்லன்’ படம் வெளியாகும் போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய கமல்ஹாசன் தன்னிடம் ரூபாய் 10 கோடி கடன் பெற்றதாகவும், அந்த பணத்திற்கு பதிலாக தனது நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் தற்போது 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை படம் நடிக்க முன்வரவில்லை என்றும் பணத்தையும் திருப்பி தரவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் அளித்திருந்தார். இதற்குக் கமல் தரப்பில் இருந்து ஏற்கனவே ஒரு விளக்கம் அளிக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒரு அறிக்கை விடுத்து எச்சரித்துள்ளது ராஜ்கமல் நிறுவனம்.

அந்த அறிக்கையில் ’கடந்த இரண்டு நாட்களாக நீங்கள் கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். இது அப்பட்டமான பொய். நாங்கள் இந்தச் செய்திகளை மறுக்கிறோம். மேலும், உங்களுக்கு கமல்ஹாசன் படம் செய்து கொடுப்பதாகவும் நீங்கள் கூறிவருவதாகத் தெரிகிறது. இதுவும் உண்மையல்ல.

இந்த நிலையில் நீங்கள் கமல்ஹாசனுக்குக் கொடுத்ததாகக் கூறும் ரூ.10 கோடி தொடர்பான விவரங்களையும் அதேபோல் கமல்ஹாசன் உங்களுக்குப் படம் செய்து கொடுக்கிறேன் என்று நீங்கள் கூறுவதற்கான ஆதார விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு வலியுறுத்துகிறோம். அல்லது இது தொடர்பாக நீங்கள் புகார் அளித்ததாக வந்த செய்திகளின் அடிப்படையில் நீங்கள் புகாரை வாபஸ் பெறவும், நீங்கள் விளக்கமளிக்கவும் கோருகிறோம்.

இவற்றை நீங்கள் செய்யத் தவறும்பட்சத்தில் உங்கள் மீது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சிவில் மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்