புகழ் பெற்ற பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா காலமானார்

வெள்ளி, 17 மார்ச் 2017 (11:38 IST)
பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா வயது 65, உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். கலைமாமணி பட்டம்  பெற்றவரும், டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், ஜெயகீதாவின் தாயும் ஆவார். காஞ்சிபுரத்தை சொந்த ஊராகக்  கொண்ட இவர் 14 வயதில் சென்னைக்கு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

 
 
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 250 படங்கள் நடித்திருக்கிறார். தொடர்ந்து ’கொஞ்சும் குமாரி’ என்ற படத்தின்  மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதே படத்தில் மறைந்த பழம்பரும் நடிகை மனோரமாவும் அறிமுகமானார் என்பது  குறிப்பிடத்தக்கது.
 
எம்.ஜி.ஆர். நடித்த பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தின் நம்பியாருக்கு ஜோடியாகவும், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்ற  படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். கந்தன் கருணை, ரஜினிகாந்தின் மன்னன், சிந்து பைரவி, பணக்காரன்  உள்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக நடித்த படம் கிரிவலம். இதில் நடிகர் ரிச்சர்டின்  பாட்டியாக நடித்துள்ளார்.
 
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த இந்திராவுக்கு ஏற்கனவே மூட்டு வலி இருந்த நிலையில் திடீரென்று மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனை அடுத்து இந்திராவின் உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்