நான் உயிரோடு தான் இருக்கிறேன்.. நேற்று இறந்த பூனம் பாண்டே இன்று வெளியிட்ட வீடியோ

Mahendran

சனி, 3 பிப்ரவரி 2024 (13:39 IST)
நடிகை பூனம் பாண்டே நேற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானார் என்று அவருடைய மேலாளர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்த நிலையில் இன்று பூனம் பாண்டே தனது சமூக வலைதளத்தில் தான் உயிருடன் இருப்பதாகவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று அந்த செய்தி வெளியிட்டதாகவும் கூறியுள்ளார். 
 
மேலும் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ள பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தை தெரிவித்துள்ளார். மற்ற புற்றுநோயை போல் அல்லாமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடியது என்றும் முன்கூட்டியே அறிந்து தகுந்த தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் இந்த நோயை குணப்படுத்தப்பட்டு விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பெண்கள் பலர் இந்த புற்றுநோய் காரணமாக தங்கள் உயிரை இழந்து வருகின்றனர் என்றும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் நேற்று அந்த செய்தியை வெளியிட்டதாகவும் பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். 
 
இருப்பினும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னுடைய உயிர் போனது போல் தெரிவித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்