தமிழ் சினிமாவில் ஒரு புதிய திருப்பத்தை கொண்டுவந்த படம் பரியேறும் பெருமாள். தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்த இயக்குனர் மாரி செலவராஜிற்கு மிகப் பெரிய பாராட்டு விழா நடத்தி உலக முழுக்க உள்ள மக்களுக்கு அவரின் பெருமையை எடுத்து சொல்ல வேண்டும் என பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
பார்ப்பவர்களின் மனங்களை கொள்ளையடித்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம், கலை உலகினர் இடையே ஒரு உற்சாகத்தை உண்டாக்கியது.
பல பிரபலங்களின் பாராட்டுகளை தொடர்ச்சியாக பெற்று வந்தது பரியேறும் பெருமாள் திரைப்படம்.
இந்நிலையில் சென்னையில் “மெய்காண் கலைஞர் தமிழ்ச்சங்கம்” ஏற்பாடு செய்திருந்த மதிப்பாய்வு நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், அமீர், வ.கௌதமன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் பாரதிராஜா,“ஒன்றை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், நாம் அவற்றை விட ஒருபடி மேலிருக்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்படி மாரி செல்வராஜின் “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தை விமர்சிப்பதற்கு அவனைத் தாண்டி ஒருபடி மேலிருக்கிறேன் என்பதை நான் ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டேன்.
பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து முடித்ததும் மறுபடியும் மறுபடியும் எனக்கு மாரி செல்வராஜுடைய முகம் தான் வந்து போனது. அவன் மனிதர்களையும் தாண்டி, மண்ணையும் பேச வைத்திருக்கிறான். கருப்பி மேல் நம் எல்லோரையும் பாசம் பொழிய செய்திருக்கிறான் என மாரி புகழ்ந்து தள்ளியுள்ளார் பாரதிராஜா.
மேலும் படத்தில் இடப்பெற்றுள்ள “நான் யார்?” என்ற படலைப் போல், இதுவரை நான் பார்த்ததே இல்லை. மாரி செல்வராஜ் ஒரு அற்புதமான அறிவாளிக் கலைஞன் என்பதைச் சொல்வதற்கு இந்த ஒரு பாடலே போதும்
இன்னும் சொல்ல போனால் யாருடைய மனதையும் புண்படுத்தாமல், படத்தின் காட்சிகளில் ஒரு கீறல் கூட விழாமல் அவ்வளவு நேர்த்தியாக இப்படத்தை எடுத்ததற்காக வாழ்த்துகள்.
இப்படிப்பட்ட படத்தை கொடுத்தவருக்கு இந்த பாராட்டுக்கள் எல்லாம் போதாது, ஒரு மிகப்பெரிய விழா எடுத்து உலக மக்களுக்கெல்லாம் உன்னைப்பற்றிச் சொல்ல வேண்டும்” என்று நெகிழ்ச்சியாக பேசினார் பாரதிராஜா.