’எதிர் நீச்சல்’, ‘கொடி’ போன்ற ஹிட் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் அடுத்ததாக தனுஷை வைத்து இயக்கும் படம் ‘பட்டாஸ்’. தனுஷுடன் மெஹ்ரின் பிர்ஸாடா, ஸ்னேகா, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.
கொடி திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் – துரை செந்தில்குமார் இணையும் இரண்டாவது படம் இது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. மோஷன் போஸ்டரில் பெரிய கதவை திறந்து கொண்டு தனுஷ் வரும் காட்சி பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரில் ரஜினி எண்ட்ரி போலவே உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் முழுக்கவும் கிராமத்தை மையப்படுத்தி போஸ்டர் உள்ளது.
அதை தாண்டி ரசிகர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது தனுஷ் கழுத்தில் இருக்கும் ருத்திராட்ஷம். ஒரு சமயத்தில் ரஜினியின் படங்களில் தொடர்ந்து பாம்பு செண்டிமென்ட் போல ருத்திராட்ஷமும் இடம் பெற்று வந்தது. பொதுவாக ரஜினி படங்களில் பாம்பு, ருத்திராட்ஷம் இடம் பெற்றால் அந்த படம் ஹிட் ஆகிவிடும் என்ற நம்பிக்கை முன்னர் இருந்தது. தற்போது அந்த செண்டிமெண்டை தனுஷும் பயன்படுத்துகிறாரோ என பேச்சு எழுந்துள்ளது.