‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிவின் பாலி. அவரின் சூப்பர் ஹிட் படமான ‘பிரேமம்’ தமிழில் ரிலீஸாகாவிட்டாலும், மலையாளத்தில் பார்த்தே அவரிடம் மனதைப் பறிகொடுத்தனர். இந்நிலையில், இன்னொரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நிவின் பாலி. மிஷ்கின் உதவியாளர் கெளதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே படத்தைத் தொடங்கினாலும், ஜனவரி மாதம் தான் ‘ரிச்சி’ என்று படத்தின் தலைப்பையே அறிவித்தனர். நிவின் பாலி மட்டுமல்லாமல், ‘சதுரங்க வேட்டை’ நட்டியும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். ஷ்ரதா கபூர், ‘கள்ளப்படம்’ லட்சுமி பிரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜும், விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் நடிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ரவுடி கேரக்டரில் நிவின் பாலியும், படகுகளை சரிசெய்யும் மெக்கானிக் கேரக்டரில் நட்டியும் நடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகும் எனத் தெரிகிறது.