மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மோசமாக விமர்சித்தது சமூகவலைதளத்தில் கொதிநிலையை உருவாக்கியுள்ளது. இதனால் கோபமான அவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் மீராவை ஆபாச அர்ச்சனையில் மூழ்க வைத்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையிலான ஆபாச பேச்சுகள் எல்லையில்லாமல் செல்ல ஒரு கட்டத்தில் மூத்த இயக்குனரான பாரதிராஜா அறிக்கை விட்டு கண்டனத்தைப் பதிவு செய்தார். அது போல சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மற்றொரு நடிகையான ஷாலு ஷம்மு மீராவுக்கு எதிராக வீடியோ ஒன்றை பகிர்ந்தார்.
இந்நிலையில் இப்போது விஜய் மற்றும் சூர்யாவை விட்டுவிட்டு ரஜினிகாந்தை சீண்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளார் மீரா மிதுன். ரஜினிகாந்தின் அரசியல் வருகை கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில் மீரா தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘ரஜினிகாந்தின் 45 வருடங்கள். சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து மிகச்சிறந்த நடிகராக மாறியுள்ள அவரை நானும் வியக்கிறேன். ஆனால் அவரது அரசியல் ஆசையும், தமிழ் நாட்டை ஆளவேண்டும் என்கிற கனவும் கனவாகவே அமையப்போகிறது. திமுகவும் அதிமுகவும் தமிழகத்துக்கான வழியை காட்டியுள்ளனர். அதனால் தள்ளி இருங்கள் ரஜினிகாந்த் அவர்களே’ எனக் கூறியுள்ளார். மீராவின் இந்த டிவிட் ரஜினி ரசிகர்களைக் கோபப்படுத்தியுள்ளது.