பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

vinoth

திங்கள், 8 ஜூலை 2024 (08:30 IST)
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது.  பெருவெற்றி பெற்ற இந்த  அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. அவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தின் மீதும் இந்த விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி கதாநாயகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அடுத்து அவர் பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படம் பற்றி சமீபத்தில் பேசியுள்ள அவர் “ஸ்பிரிட் திரைப்படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த படம் முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும். இந்த படத்தில் பிரபாஸ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். திரைக்கதை பணிகள் பெரும்பகுதி முடிந்துவிட்டது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தில் தென் கொரியாவின் பிரபல நடிகரான மா டாங் சியோக் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் பல ஆக்‌ஷன் படங்களில் நடித்து, உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியான பிரபாஸ், கொடூர கேங்ஸ்டரான தென்கொரியாவைச் சேர்ந்த வில்லனை தேடிக் கண்டுபிடிப்பதுதான் கதை என்றும் சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்