மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மலையாளத்தில் ஜெயராமுடன் 'மார்கோனி மதி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இவருக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆலப்புழாவில் அண்மையில் விஜய் சேதுபதி படத்தின் ஷுட்டிங்கில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் விஜய் சேதுபதி, பேசும் போது, சமூகத்தில் நிலவும் சாதி கட்டமைப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
" கல்வியும், காதல் திருமணமுமே சாதி கட்டமைப்புகளை ஒழிக்க இருக்கும் ஒரே வழி. ஆலப்புழாவில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த போது, பிரசாதத்தை கோயில் பூசாரி தூக்கி எறிந்தார். அப்போது கையில் கிடைக்காமல் கீழே தவறவிட்டுவிட்டேன். எனக்கு மன வருத்தமாக இருந்தது. பிரசாதத்தை தூக்கி எறியும் வழக்கத்தை தான் கேரள கோயில்களில் பின்பற்றுகிறார்களா என்பதை விசாரிக்க வேண்டும்.
சபரிமலை கோயில் விவகாரத்தில் பெண்களை அனுமதிக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முடிவுக்கு என் ஆதரவு உண்டு. நான் அவரது ரசிகன் ஆவேன். ஆண்களுக்கு சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது என வாழ்வில் எல்லாமே எளிதாக இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. மாதவிடாய் காரணமாக மாதம் மாதம், வலியை அனுபவிக்கிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் இல்லை என்றால் இந்த உலகத்தில் நாம் யாருமே பிறந்து இருக்க மாட்டோம்" என்றார்.