ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நீண்ட காலம் கழித்து படம் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் அதுகுறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இருவரும் தங்கள் கெரியர் தொடக்கத்தில் ஒன்றாக இணைந்து இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படிதான் என பல படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் பிரிந்து தனித்தனி வழியில் பயணிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இவ்வளவு ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து நடிக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அதற்கான சிக்னல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. ஒரு நேர்க்காணலில் இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் பேசியபோது, அவர்கள் இருவரை வைத்து படம் இயக்க ஆசை என்றும், ஆனால் அதை நான் கேட்க உரிமையில்லை. அவர்கள் சீனியர்கள், அவர்களாக முடிவெடுத்து என்னை அழைத்தால் மகிழ்ச்சி என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசனும் ஒரு மேடையில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதில் விருப்பம் தெரிவித்து பேசியிருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ்தான் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில்தான் இந்த ப்ராஜெக்ட் குறித்து பேசிய ரஜினிகாந்த் “ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை இருக்கு, ப்ளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாப்பாத்திரம் எதுவும் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
இதன்மூலம் இருவரும் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ள அதேசமயம், அதை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் என உறுதி செய்யப்படவில்லை என்பதையும் மறைமுகமாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
Edit by Prasanth.K