அவதூறு கிளப்பினால்... லிங்கா விநியோகஸ்தர் தரப்பு எச்சரிக்கை

ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (10:16 IST)
லிங்கா ப்ளாப், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பணத்தை திரும்பக் கேட்டு போர்க்கொடி என கடந்த சில நாள்களாக இணையமெங்கும் ஒரே புழுதி. விநியோகஸ்தர்கள் லிங்கா நஷ்டம் குறித்து பேசுவதாக சில வீடியோ கிளிப்களும் வெளியிடப்பட்டன. இந்த கூத்தில் நாம் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் லிங்காவின் தமிழக விநியோக உரிமையை (கோவை நீங்கலாக) வாங்கிய வேந்தர் மூவிஸ் சார்பில் டி.சிவா அறிக்கை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
 
"கடந்த 2 நாட்களாக லிங்கா படத்தின் வசூல் பற்றிய தவறான விபரங்களை சில தவறான நபர்கள் பரப்பி வருகிறார்கள். லிங்கா வெளியான சமயத்தில் தமிழகமெங்கும் அரையாண்டுத் தேர்வு நடப்பதாலும், தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 600 அரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்டதாலும், எதிர்ப்பார்த்ததை விட சற்று வசூல் குறைந்தது. ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக மக்களின் வருகையால் திரையரங்குகள் நிரம்பி வருகின்றன. இதுவே படத்தின் வெற்றிக்கு சாட்சி. லிங்கா மக்களுக்குப் பிடித்த படம். விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாகவும் நிச்சயம் இருக்கும். எனவே படத்தின் வசூல் பற்றிய எல்லா விபரங்களும் நாங்கள் அறிவிப்பது மட்டுமே உண்மையானது. மேலும் லிங்கா பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்."
 
- இவ்வாறு டி.சிவா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்