தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி மிகச்சிறந்த பாடலாசிரியர்களுள் ஒருவராக பாராட்டப்பட்டவர் பாடலாசிரியர் முத்து விஜயன். "மேகமாய் வந்துப் போகிறேன், வெண்ணிலா உன்னைத் தேடினேன்" என்ற அற்புதமான பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.
இந்த முதல் பாடலே பல ரசிகர்களின் மனதில் காதல் வேரை ஊன்றச்செய்தது. அதன் பின் "கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா" என்ற சூப்பர் ஹிட் பாடலின் மூலம் இவரது புகழ் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தது. அதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து பாடல்களை எழுதிய இவர் இதுவரை 800-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியதோடு பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.
இதற்கிடையில் சில குடும்ப பிரச்னைகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான முத்து விஜயன் சமீப காலமாக தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தில் தங்கியிருந்தார். பின்னர் மஞ்சள் காமாலை நோய் தாக்கப்பட்டு கல்லீரல் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த முத்து விஜயன் நேற்று மாலை உயிரிழந்தார். இவரது உடல் சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தனர்.