கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில், கமல் இயக்கி 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘விஸ்வரூபம்’. பல தடைகளைக் கடந்து இந்தப் படம் ரிலீஸானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை எடுக்கும்போதே அடுத்த பாகத்துக்கான 40 சதவீத காட்சிகளை கமல் எடுத்துவிட்டார். எனவே, 2013ஆம் ஆண்டே இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால், தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட பண பிரச்னையால், படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கமல், படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கிவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும், விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2ம் தேதி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் “விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் கடைசிப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலில் இந்தி வரிகளை நானும், பிரசூன் ஜோஷியும் எழுதியுள்ளோம். தெலுங்கு பதிப்பில் இப்பாடல் விரைவில் ஒலிப்பதிவு செய்யப்பட இருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.