இப்போ 96; ஆனா அப்போவே சங்கமம் –தெறிக்க விட்ட சன் டீவி
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (14:22 IST)
96 திரைப்படம் வெற்றிகரமாக இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் போதே சன் டீவியில் தீபாவளி சிறப்புத் திரைப்படமாக ஒளிப்பரப்பாக இருப்பது பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
கடந்த மாதம் அக்டோபர் 4-ந்தேதி விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் இந்த வருடம் வெளியான படங்களிலேயே லாபம் சம்பாதித்த வெகுசில படங்களுள் ஒன்று. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் சென்னை போன்ற பெருநகரங்களில் இன்னும் சில தியேட்டர்களில் நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளிப் பண்டிகை வர இருப்பதால் தொலைக்காட்சிகள் தங்கள் சேனல்களின் டீ ஆர் பி ரேட்டிங்கை அதிகப்படுத்த வித்யாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் சன் டீவி தனது ஆயுதமாக ’96’ படத்தை ஒளிப்பரப்ப முடிவு செய்துள்ளது. இன்னும் 96 படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த ஒளிப்பரப்பால் படத்தின் தியேட்டர் வசூல் பாதிக்கப்படும் என படக்குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
படத்தின் நாயகியான திரிஷா இது குறித்து தனது டிவிட்டரில் ‘படம் வெளியாகி இது எங்களுக்கு 5-வது வாரம். இன்னும் அனைத்து திரையரங்குகளிலும் 80 சதவீதம் நிரம்புகிறது. இவ்வளவு சீக்கிரம் 96 படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். தயவு செய்து இதை பொங்கலுக்கு தள்ளி வையுங்கள் என்பது எங்கள் கோரிக்கை. அவ்வாறு செய்தால் நன்றியுடன் இருப்பேன்’ என்று த்ரிஷா சன் டி.வி.க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சன் டீ.வி.யின் இந்த அதிரடி முடிவுக்கு காரணமாக சன் பிக்சர்ஸின் சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதால் தங்கள் படத்திற்குப் போட்டியாக வேறு எந்த படமும் திரையரங்குகளில் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால் சன் டீவி இதேப் போன்று பல படங்களை திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே தங்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியுள்ளதாக கூறுகின்றனர் விவரமறிந்தவரகள்.
சினிமா வியாபாரம் குறித்து தொடர்ந்து பேசியும், எழுதியும் வரும் இயக்குனர் கேபிள் சங்கர் இது குறித்து தனது ’சினிமா வியாபாரம்’ எனும் புத்தகத்தில் தான் எழுதிய பகுதியை இப்போது முகநூலில் பகிர்ந்துள்ளார். அதில் ‘திரையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே முதல் முதலாய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் முதல் படம் 96 அல்ல, சங்கமம். படம் வெளியான முதல் வார இறுதியிலேயே தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் போதே சன் டி.வி.யில் ஒளிப்பரப்பானது. விநியோகஸ்தர்களிடம் விற்காமல் தயாரிப்பாளர் நேரடியாக விநியோகம் செய்த படத்தை அப்படி தொலைக்காட்சிக்கு விற்கலாம் என்று கண்டுபிடித்து அதை தொடங்கி வைத்தவர் பிரமிட் நடராஜன். அண்ட் சன் டிவி.’ எனப் பகிர்ந்துள்ளார்.
இதைப்போலவே ரிதம் மற்றும் அல்லி அர்ஜுனா ஆகியப் படங்களும் சன் டீவியால் குறுகிய காலத்திலேயே ஒளிப்பரப்பாக்கப்பட்டுள்ளதாம்.