விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ஷமிதா ஷெட்டி. இவர் சமீபத்தில் ஜெய்ப்பூரிலிருந்து சண்டிகருக்கு இண்டிகோ நிறுவன விமானத்தில் சென்ற போது, அவருடைய மற்றும் அவரது மேக்கப் ஸ்டைலிஸ்ட் லக்கேஜ்களை எடை தொடர்பான பிரச்சினையால், அவர்கள் விமானத்திலிருந்து கேட்காமலேயே இறக்கியுள்ளனர்.
சண்டிகருக்கு வந்தபின் தான் தங்களுடைய லக்கேஜ் ஜெய்ப்பூரிலேயே உள்ளது என்பது அவர்களுக்கு தெரிய வந்தது. அடுத்த விமானத்தில் லக்கேஜ்களை அனுப்புவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதால், அவர் சண்டிகர் விமான நிலையத்திலேயே பல மணி நேரம் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், "இண்டிகோ ஊழியர்களால் எந்த உதவியும் கிடைக்கவில்லை; உங்கள் விமானத்தில் பறப்பது மிகவும் மோசமான அனுபவம்" என்று கடுமையாக கருத்து தெரிவித்தார். இதன் பின்னர், ஷமிதா ஷெட்டியிடம் இண்டிகோ நிறுவனம் தங்களது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.